×

ஹைவேவிஸ் மலைப்பகுதியில் நீர்மட்டம் குறைந்து வரும் ஏரிகள் : சீஷன் தொடங்கியும் மழையைக் காணோம்

சின்னமனூர் : தென்மேற்கு பருவமழை சீஷன் தொடங்கியும், ஹைவேவிஸ் மலைப்பகுதியில் போதிய மழை இல்லாததால், அணைகள், ஏரிகள் வறண்டு கிடக்கின்றன. இதனால், விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். கேரளாவில் ஜூன் மாத தொடக்கத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கும்.

 இடுக்கி மாவட்டத்தில் பெய்யும் மழையால், முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் உயர்ந்து தமிழகத்தில் தேனி உள்ளிட்ட 5 மாவட்டங்களில் பாசனத்திற்கும் குடிநீருக்கும் பயன்படும். இந்தாண்டு முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 130 அடியாக இருந்ததால், கம்பம் பள்ளத்தாக்கு இருபோக நெல் சாகுபடிக்காக ஜூன் முதல் தேதி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் நாற்றங்கால் பாவி, நாற்றுகளை வளர்க்கும் பணியில் முழுமையாக ஈடுபட்டுள்ளனர்.

சின்னமனூர் அருகே, மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள ஹைவேவிஸ் மலை கிராமங்கள், கேரள மாநிலத்தில் உள்ள தேக்கடி மலைப்பகுதியோடு ஒட்டி உள்ளது. கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கியவுடன் ஹைவேவிஸ் மலைப்பகுதியிலும், மழை பெய்யும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இன்னும் மழை பெய்ய தொடங்கவில்லை. இதனால், அணைகள் மற்றும் ஏரிகள் வறண்டு கிடக்கின்றன.

இதனால், ஹைவேவிஸ் பகுதி தோட்ட விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். முல்லைப்பெரியாறு பாசனம் மூலம், இருபோக நெல் சாகுபடி செய்யும் தேனி மாவட்ட பாசன விவசாயிகளும் கவலை அடைந்துள்ளனர்.


Tags : Highwavis ,Seishan , Chinnamanur,South East monsoon,Heavy rain
× RELATED ஹைவேவிஸ் மலையில் பயங்கர காட்டுத்தீ: அரிய வகை மூலிகைகள் நாசம்