×

MLA-க்கு 5 ஆண்டுகள்... ARMYக்கு 4 ஆண்டுகளா?.. பொங்கிய தமிழக இளைஞர்கள்... அக்னிபாத் திட்டத்திற்கு எதிராக சென்னையிலும் போராட்டம்!!

சென்னை‘அக்னி பாதை’ ராணுவ ஆட்சேர்ப்பு திட்டத்தை எதிர்த்து நாடு முழுவதும் போராட்டம் நடந்து வரும் நிலையில், சென்னையிலும், போராட்டம் செய்த  இளைஞர்களை போலீசார் கைது செய்தனர்.இந்திய  ராணுவத்தில் இளைஞர்களை சேர்க்க ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ள அக்னி பாதை  திட்டத்திற்கு நாடு முழுவதும் இளைஞர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இத்திட்டத்தின்படி 6 மாத பயிற்சிக்கு பின்னர் 4 ஆண்டுகள் மட்டுமே ராணுவத்தில் பணியமர்த்தப்படுவார்கள் என்றும் பணிக்காலம் முடிந்து தேர்வு செய்யப்படும் 25 சதவீதம் பேர் மட்டுமே நிரந்தர பணிக்கு சேர்த்து கொள்ளப்படுவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த திட்டத்திற்கு  எதிர்ப்பு தெரிவித்து கடந்த 3 நாட்களாக பீகார், உத்தரபிரதேசம் உள்ளிட்ட  பல்வேறு மாநிலங்களில் தொடர் போராட்டம் நீடித்து வருகிறது. அதனால் சில  மாநிலங்களில் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. 12க்கும் மேற்பட்ட ரயில்களுக்கு வன்முறையாளர்கள் தீ  வைத்தனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 94 விரைவு ரயில்கள் மற்றும் 140  பயணிகள் ரயில்கள் உட்பட 340 ரயில்களை ரத்து செய்துள்ளதாக ரயில்வே நிர்வாகம்  அறிவித்துள்ளது. குறிப்பாக சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து, போராட்டம் நீடித்து  வரும் வழித்தடங்கள் வழியாக செல்லக்கூடிய எக்ஸ்பிரஸ் ரயில்கள் அனைத்தும்  ரத்து செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் அக்னிபாதை திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆரணி, கோவை, திருவண்ணாமலை உள்ளிட்ட பகுதிகளிலிருந்து சென்னைக்கு வந்த இளைஞர்கள், போர் நினைவு சின்னம் பகுதியில் இன்று காலை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையறிந்ததும் போலீசார் பாதுகாப்பு பணிக்காக குவிக்கப்பட்டனர். மேலும், தலைமை செயலகத்தை முற்றுகையிட முயற்சி செய்வதாகவும் தகவல் வெளியானதால் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இளைஞர்களுடன் சென்னை வடக்கு கூடுதல் ஆணையர் அன்பு தலைமையிலான போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.  இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இளைஞர்களை கைது செய்தனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

Tags : MLA ,ARMY ,Tamil Nadu ,Agnibad ,Chennai , Agni Path, Army Recruitment, Chennai, Youth, Struggle
× RELATED தமிழ்நாட்டில் கோடை வெப்பத்தை...