ஆப்கானில் குருத்வாராவில் வெடிகுண்டுகளை வீசி தீவிரவாதிகள் தாக்குதல்... சீக்கியர்கள் பலர் உயிரிழந்திருக்கலாம் என அச்சம்!!

காபூல் : ஆப்கானிஸ்தானில் உள்ள சீக்கிய வழிபாட்டுத் தலத்தில் நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதலில் பலர் உயிரிழந்திருக்கக் கூடும் என்று அஞ்சப்படுகிறது. தலைநகர் காபூலில் உள்ள கார்டே பர்வான் என்ற இடத்தில் சீக்கிய மதத்தினருக்கான குருத்வாரா செயல்பட்டு வருகிறது. இன்று அதிகாலை 30க்கும் மேற்பட்ட சீக்கியர்கள் குருத்வாராவில் வழிபாடு நடத்திக் கொண்டு இருந்தனர். அப்போது ஆயுதங்களுடன் வந்த தீவிரவாதிகள் வெடிகுண்டுகளை வீசியதுடன், துப்பாக்கிகளை கொண்டும் தாக்குதல் நடத்தினர். இதில் சீக்கிய வழிபாட்டுத் தலத்தின் ஒரு பகுதி சேதம் அடைந்துள்ளது.

 குருத்வாராவில் இருந்து கரும்புகை வெளியாகுவதை கண்ட தாலிபான் படையினர் உடனடியாக அப்பகுதிக்கு விரைந்துச் சென்று தீவிரவாதிகள் மீது தாக்குதல் நடத்தினர். குண்டுவெடிப்பில் ஏற்பட்ட உயிரிழப்புகள் குறித்து தகவல்கள் ஏதும் வெளியிடப்படவில்லை என்ற போதும், சிலர் உயிரிழந்திருக்கக் கூடும் என்று அஞ்சப்படுகிறது. காபூல் குருத்வாரா தாக்குதலின் பின்னணியில் ஐஎஸ் தீவிரவாதிகள் இருக்கலாம் என்று தாலிபான்கள் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.குருத்வாரா மீதான தாக்குதல் கவலை அளிப்பதாக கூறியுள்ள இந்தியா, காபூலின் நிலைமையை கூர்ந்து கவனித்து வருவதாக தெரிவித்துள்ளது.

Related Stories: