அரசு நிலத்தில் இருந்த மண் எடுத்ததாக ஓ.ராஜா மீது புகார்; காலையில் நடந்தது ஆய்வுக்கூட்டம் மாலையில் வந்தது அழைப்பாணை: மீண்டும் நடத்த புகார்தாரர் வலியுறுத்தல்

தேனி: தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே கைலாசபட்டியில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தின் தம்பி ஓ.ராஜா ஆங்கிலப்பள்ளி நடத்தி வருகிறார்.  இப்பள்ளி வளாகத்திற்கு தேவையான மண்ணை பெரியகுளம் தாலுகா வடவீரநாயக்கன்பட்டி கிராமத்தில் உள்ள அரசு புறம்போக்கு நிலங்களில் இருந்து அரசு அனுமதியின்றி வெட்டியெடுத்து பயன்படுத்தியுள்ளதாக கடந்த மே 14ம் தேதி பிரபு என்பவர் தேனி கலெக்டர் அலுவலகத்தில் புகார் அளித்தார். அனுமதியின்றி மண் வெட்டியெடுத்ததன் மூலம் அரசுக்கு வருவாய் இழப்பு  ஏற்பட்டுள்ளது குறித்து  கள ஆய்வு செய்து, வட்ட அளவிலான கண்காணிப்புக்குழு ஆய்வுக்கூட்டம் நடத்தி எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்த அறிக்கையை மாவட்ட அளவிலான கண்காணிப்பு குழுவின் மேல்நடவடிக்கைக்கு சமர்ப்பிக்க வேண்டும் என கலெக்டர் உத்தரவிட்டிருந்தார்.

இந்நிலையில், கடந்த ஜூன் 15ம் தேதி பெரியகுளம் தாலுகா அலுவலகத்தில் வட்ட அளவிலான கண்காணிப்பு குழுக் கூட்டம் காலையில் நடந்துள்ளது. இக்கூட்டத்திற்கான அழைப்பு, புகார்தாரரான பிரபுவிற்கு கூட்டம் நடக்கும் தேதியான ஜூன் 15ம் தேதி மாலையில் தான் கிடைத்துள்ளது. இதனால் இவர் வட்ட அளவிலான கண்காணிப்புக்குழு ஆய்வு கூட்டத்தில் கலந்து கொள்ள முடியாமல் போயுள்ளது.

இதுகுறித்து புகார்தாரரான பிரபு கூறும்போது, ‘‘நான் அளித்த புகாரின்பேரில், இக்கூட்டம் நடக்கிறது. இக்கூட்டம் தொடர்பாக கடந்த கண்காணிப்புக்குழு சார்பில் ஜூன் 7ம் தேதியே அழைப்பாணை தயார் செய்யப்பட்டுள்ளது. ஆனால், இந்த அழைப்பாணையை எனக்கு கூட்டம் நடக்கும் தேதியான  ஜூன் 15ம் தேதி மாலை கிடைக்கும் வகையில் அதிகாரிகள் அனுப்பி உள்ளனர்.

தோட்டத்து வேலைக்கு சென்று விட்டு மாலை வீடு திரும்பும்போது அழைப்பாணை கிடைத்தது. அழைப்பாணை கிடைத்தபோது கூட்டம் நடந்து முடிந்து விட்டது. இதுகுறித்து மேலதிகாரிகளிடம் மீண்டும் புகார் அளிக்க உள்ளேன். ஓபிஎஸ் தம்பி என்பதால் சில அதிகாரிகள் தவறுக்கு துணைபோகும் வகையில் செயல்படுவதாக சந்தேகம் எழுகிறது. எனவே, இந்த வட்ட அளவிலான கண்காணிப்புக்குழு ஆய்வு கூட்டத்தை  புகார்தாரரான நான் கலந்து கொள்ளும் வகையில் மீண்டும் நடத்திட வேண்டும்’’’ என்றார்.

Related Stories: