×

ஒற்றை தலைமை முடிவை தன்னிச்சையாக கொண்டு வரமுடியாது அதிமுகவை அழிவுப்பாதைக்கு கொண்டு சென்றுவிடும்: முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் ஆவேசம்

சென்னை: ஒற்றை தலைமை என்ற முடிவை தன்னிச்சையாக  கொண்டு வர முடியாது என்றும், இது அதிமுகவை அழிவு பாதைக்கு கொண்டு  சென்றுவிடும் என்றும் வைத்திலிங்கம் கூறினார். அதிமுகவில் ஒற்றை தலைமை வேண்டும் என்ற புதிய கோஷத்தால் ஓபிஎஸ் - இபிஎஸ் இடையே உச்சக்கட்ட மோதல் ஏற்பட்டுள்ளது. இந்த பிரச்னை வருகிற 23ம் தேதி நடைபெறும் அதிமுக பொதுக்குழுவில் எழுப்பப்படலாம் என்பதால் இரண்டு கோஷ்டியினரும் இதை சந்திக்க தயாராகி வருகிறார்கள். இதுபற்றி கடந்த 4 நாட்களாக இரண்டு தலைவர்களையும் அவரது ஆதரவாளர்கள் சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறார்கள்.

இந்நிலையில் 2 நாட்களுக்கு முன் சேலத்தில் எடப்பாடி பழனிசாமியை முன்னாள் அதிமுக எம்பி தம்பிதுரை சந்தித்து பேசினார். பின்னர், தம்பிதுரை நேற்று சென்னை வந்து ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்து பேசினார். அப்போது எடப்பாடி, தம்பிதுரை மூலம் சமரச தூது அனுப்பி விட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த சந்திப்பு சுமார் ஒரு மணி நேரம் நடந்தது. இந்த சந்திப்பின்போது ஓபிஎஸ் ஆதரவாளரும் துணை ஒருங்கிணைப்பாளருமான வைத்திலிங்கம், மைத்ரேயன், மனோஜ்பாண்டியன், ஜெ.சி.டி.பிரபாகர் ஆகியோர் உடனிருந்தனர். இந்த பேச்சுவார்த்தை முடிந்த பிறகு வைத்திலிங்கம் நிருபர்களிடம் கூறியதாவது:

முன்னாள் நாடாளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை, கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தை வந்து சந்தித்தார். கட்சி வலுவாக ஜெயலலிதா எண்ணம்போல் தமிழ்நாட்டில் மீண்டும் ஆட்சிக்கு வந்து, இப்போது ஒற்றை தலைமை, இரட்டை தலைமை என்ற பிரச்னை கட்சியின் 2ம் கட்ட தலைவர்கள், தொண்டர்களிடம் ஏற்பட்டு இருக்கிறது. ஜெயலலிதா எண்ணப்படி கட்சியை வலுப்படுத்தி மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டும். அதிமுக வலுவாக இருக்க வேண்டும். அதற்கு வேண்டிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டியது பற்றி அப்போது விவாதிக்கப்பட்டது. அவர் சொன்ன கருத்துகளுக்கு ஓ.பன்னீர்செல்வம் கருத்து சொல்லி இருக்கிறார். அந்த கருத்தை கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியிடம் நான் (தம்பிதுரை) தெரிவிக்கிறேன் என்று கூறி சென்றிருக்கிறார்.

தம்பிதுரை வந்து சென்றிருக்கிறார். இதை தொடர்ந்து நான் (வைத்திலிங்கம்) சென்று பேசக்கூடிய வாய்ப்பு ஏற்பட்டால் பத்திரிகையாளர்களிடம் சொல்லிவிட்டு எடப்பாடி பழனிசாமியை உறுதியாக சந்திப்பேன். 23ம் தேதி இரண்டு பேரும் கையெழுத்து போட்டு பொதுக்குழுவுக்கு அழைப்பு விடுத்து இருக்கிறார்கள். அதற்கு பிறகு பல சூழ்நிலைகள் ஏற்பட்டிருக்கிறது. அதுபற்றி இப்போது பேசிக்கொண்டிருக்கிறோம். இந்த பேச்சுவார்த்தை முடிந்த பிறகு நல்ல பதில் தெரிவிக்கப்படும்.

வருகிற பொதுக்குழுவில் ஒற்றை தலைமை பிரச்னை குறித்து பேசப்படுமா என்று கேட்கிறீர்கள். பொதுக்குழுவில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் ஆகிய இருவரும் கையெழுத்து போட்டுதான் இந்த தீர்மானத்தை நிறைவேற்ற முடியும். தானாக எந்த தீர்மானமும் நிறைவேற்ற முடியாது. அப்படி தீர்மானத்தை கொண்டு வந்தாலும் அது செல்லாது. அதாவது, கட்சியின் அடிப்படை உறுப்பினர்களில் இருந்து ஒருங்கிணைப்பாளரும், இணை ஒருங்கிணைப்பாளரும் தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கிறார்கள். இதை பொதுக்குழுவில் வைத்து ரத்து செய்ய முடியாது. தலைமை இறந்து போனால்தான் தற்காலிகமாக பொதுக்குழுவில் கொண்டு வர முடியும். இப்படி ஒற்றை தலைமை என்ற முடிவை யாரும் தன்னிச்சையாக கொண்டு வருவது சட்டப்படி செல்லாது. இது கட்சியை அழிவு பாதைக்கு கொண்டு செல்லும். இவ்வாறு அவர் கூறினார்.

Tags : AIADMK ,Former Minister ,Vaithilingam , Unable to bring a single leadership decision on its own, AIADMK will go to the brink of destruction: Former Minister Vaithilingam
× RELATED திருச்சி நாடாளுமன்ற தொகுதி அதிமுக செயல் வீரர்கள் கூட்டம்