×

ஆளுநர் ஒப்புதல் இல்லாமல் முன்கூட்டியே விடுவிக்க கோரிய நளினி, ரவிச்சந்திரன் மனுக்கள் தள்ளுபடி: சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு

சென்னை: ஆளுநரின் ஒப்புதலுக்கு காத்திருக்காமல் தன்னை விடுதலை செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிடக் கோரி ராஜிவ் கொலை வழக்கு ஆயுள் கைதி நளினி தாக்கல் செய்த மனுவையும், முன்கூட்டியே விடுதலை செய்ய கோரி ரவிச்சந்திரன் தாக்கல் செய்த வழக்கையும் சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து தீர்ப்பளித்துள்ளது.
 
முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் கைதிகளாக உள்ள நளினி, முருகன் உள்பட ஏழு பேரையும் விடுதலை செய்ய 2018 செப்டம்பர் 9ம் தேதி தமிழக அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றி 2018 செப்டம்பர் 11ம் தேதி ஆளுநர் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
 
அரசு அனுப்பிய தீர்மானத்தில் ஆளுநர் தாமதிப்பதால் அவரது ஒப்புதலுக்கு காத்திருக்காமல் தன்னை விடுதலை செய்யக்கோரி  நளினி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். கடந்த முறை வழக்கு விசாரணைக்கு வந்தபோது, நளினி தடா சட்டப்பிரிவில் தண்டிக்கப்பட்டாரா என்பதை தெரிந்து கொள்வதற்காக சிறப்பு நீதிமன்றத்தின் அசல் தீர்ப்பு  சமர்ப்பிக்க தலைமை நீதிபதி அமர்வு உத்தரவிட்டிருந்தது.
 
இந்நிலையில் இந்த வழக்கு தலைமை நீதிபதி முனீஸ்வர் நாத் பண்டாரி மற்றும் நீதிபதி மாலா அமர்வில் மீண்டும்  விசாரணைக்கு வந்தது. அப்போது சிறப்பு நீதிமன்ற தீர்ப்பு சமர்ப்பிக்கப்பட்டது. இதேபோல் தன்னை முன்கூட்டியே விடுதலை செய்ய கோரிய ரவிச்சந்திரன் மனுவும் விசாரணைக்கு வந்தது.  இந்த மனுக்கள் மீதான அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்த  நிலையில் இந்த வழக்குகளில் நீதிபதிகள் நேற்று தீர்ப்பளித்தனர்.

தீர்ப்பில், ஏற்கனவே தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளை இரு நீதிபதிகள் அமர்வுகள் தள்ளுபடி செய்துள்ள நிலையில், அதே விவகாரம் தொடர்பான வழக்கு நிலைக்கத்தக்கதல்ல.  இந்திய அரசியல் சாசனம் 161வது பிரிவின் கீழ் முன்கூட்டி விடுதலை செய்வது தொடர்பாக ஆளுநரின் கையெழுத்து அவசியம் என்று உச்ச நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது. ஆளுநருக்கு அமைச்சரவை தீர்மானத்தை அனுப்பியதன் மூலம், அவரது ஒப்புதல் இல்லாமல் அரசே விடுதலை செய்யலாம் என்று கூற முடியாது. அமைச்சரவை தீர்மானத்தின் மீது முடிவெடுக்க தாமதித்தால் ஆளுநர் ஒப்புதல் தேவையில்லை என்ற நளினி தரப்பு வாதத்தை ஏற்க முடியாது.
 
பேரறிவாளன் வழக்கில் ஆளுநர் கையெழுத்து இல்லாமல் குற்றவாளிகளை விடுதலை செய்யலாம் என்று உச்ச நீதிமன்றம் கூறவில்லை. மாறாக, தனது சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி விடுதலை செய்துள்ளது. அதுபோன்ற சிறப்பு அதிகாரம் உயர் நீதிமன்றங்களுக்கு இல்லை. ஆளுநருக்கு அமைச்சரவை ஆலோசனை வழங்கினாலும் அதன் மீது சட்டத்திற்கு உட்பட்டு முடிவெடுக்க அவருக்கு அதிகாரம் உள்ளது. அதனால் ஆளுநருக்கு தனிப்பட்ட அதிகாரம் ஏதும் இல்லை என்றும் கூறிவிட முடியாது. இந்த வழக்கில் ராஜிவ் காந்தியுடன் 9 காவல்துறையினர் உள்ளிட்ட 15 அப்பாவி பொதுமக்களும் உயிரிழந்துள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை ஆளுநர் பரிசீலனைக்கு எடுத்துக்கொண்டு அரசின் தீர்மானம் சரியா தவறா என முடிவெடுக்க வேண்டும்.
 
அமைச்சரவை தீர்மானத்தை ஆளுநர் ஏற்றுக்கொள்ளாத நிலையிலும், அமைச்சரவை தீர்மானம் குடியரசு தலைவருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதால் 7 பேரையும் விடுதலை செய்யும்படி அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட முடியாது. எனவே, இந்த வழக்குகள் தள்ளுபடி செய்யப்படுகின்றன என்று கூறப்பட்டிருந்தது.

தீர்ப்பு தொடர்பாக நளினியின் வழக்கறிஞர் ராதாகிருஷ்ணன் கூறும்போது, ‘‘உயர் நீதிமன்றத்திற்கு அரசியலமைப்பு கொடுத்துள்ள அதிகாரத்தை நீதிபதிகள் கவனத்தில் கொள்ளவில்லை. இந்த தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் முறையிட உள்ளோம்’’ என்றார்.



Tags : Nalini ,Ravichandran ,Governor ,Chennai High Court , Nalini, Ravichandran's petitions dismissed without Governor's approval: Chennai High Court rules
× RELATED ராஜிவ்காந்தி கொலை வழக்கில்...