×

எல்கேஜி, யுகேஜி வகுப்புக்காக அரசு பள்ளிகளில் 5,000 சிறப்பு ஆசிரியர்கள் நியமனம்: பள்ளி கல்வித்துறை திட்டம்

சென்னை: அரசுப் பள்ளிகளில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் தொடர்ந்து நடத்தப்படும் என்பதால் அவற்றில் 5 ஆயிரம் சிறப்பு ஆசிரியர்களை நியமிக்க பள்ளிக் கல்வித்துறை உத்தேசித்துள்ளது. தமிழகத்தில் சமூக நலத்துறையின் கீழ் இயங்கி வந்த அங்கன்வாடி மையங்களில் கடந்த ஆட்சியில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் தொடங்கப்பட்டன. அவற்றில் தொடக்க கல்வித்துறையில் பணியாற்றும் ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு பாடம் நடத்தப்பட்டது. இந்நிலையில், தொடக்கப் பள்ளிகளில் ஆசிரியர்கள் தேவை அதிகரித்துள்ளதால் அங்கன்வாடி மையங்களுக்கு அனுப்பப்பட்ட ஆசிரியர்கள் திரும்பவும் தொடக்கப் பள்ளிகளுக்கு ஈர்க்கப்பட்டனர்.

இதையடுத்து எல்கேஜி, யுகேஜி வகுப்புகளை சமூக நலத்துறை மீண்டும் நடத்தும் என்று எதிர்பார்க்கப்பட்டது. பள்ளிக் கல்வித்துறையே நடத்த வேண்டும் என்று கோரிக்கை எழுந்ததால், எல்கேஜி, யுகேஜி வகுப்புகளை அரசுப் பள்ளிகளில் நடத்த முடிவு செய்யப்பட்டு அதற்காக ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள் என்றும் பள்ளிக் கல்வித்துறை தெரிவித்து இருந்தது. இதையடுத்து, 2381 அங்கன்வாடி மையங்களில் இயங்கிவரும் எல்கேஜி, யுகேஜி வகுப்புகளில்  5ஆயிரம் சிறப்பு ஆசிரியர்களை நியமிக்க பள்ளிக் கல்வித்துறை முடிவு செய்துள்ளது. அதன்படி, 2500 சிறப்பு ஆசிரியர் முதற்கட்டமாக தேர்வு செய்யப்பட உள்ளனர். அவர்கள் டிடிஎட் என்னும் ஆசிரியர் பயிற்சி முடித்த பெண்களாக இருக்கவும் பள்ளிக் கல்வித்துறை முடிவு செய்துள்ளது. இதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளதாகவும், ஆகஸ்ட் மாதம் இந்த வகுப்புகள்  தொடங்கும் என்றும் பள்ளிக்கல்வி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Tags : Appointment of 5,000 Special Teachers in Government Schools for LKG, UKG Class: School Education Program
× RELATED தேர்தல் நிதியை சுருட்டியதாக உள்கட்சி...