×

கோயில் பணியாளர் குறைதீர்ப்பு கூட்டம் ஆண்டுக்கு இருமுறை நடத்த வேண்டும்: ஆணையர் குமரகுருபரன் உத்தரவு

சென்னை: கோயில் பணியாளர்கள் குறைதீர்ப்பு கூட்டம் ஆண்டுக்கு இருமுறை நடத்தப்பட வேண்டும். இதில், பணியாளர்கள் வைக்கும் கோரிக்கைகள் மீது 15 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆணையர் குமரகுருபரன் மண்டல இணை ஆணையர்களுக்கு உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து, இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன் அனைத்து மண்டல இணை ஆணையர்களுக்கு அனுப்பியுள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது:

2022-23ம் ஆண்டின் சட்டமன்ற பேரவையின் வரவு செலவு கூட்டத்தொடரில் மானியக்கோரிக்கையின் போது, கோயிலில் பணியாற்றி வரும் அர்ச்சகர், பூசாரி, பட்டாச்சாரியார் உள்ளிட்ட அனைத்து பணியாளர்கள் குறைதீர்ப்பு கூட்டம் ஆண்டுக்கு இருமுறை நடத்தப்படும் என்று அமைச்சர் சேகர்பாபு அறிவித்தார்.

இந்த  அறிவிப்பை செயல்படுத்தும் வகையில் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள  அனைத்து கோயில்களிலும் ஆண்டுதோறும் ஜனவரி மற்றும் ஜூலை மாதத்தில் கோயில் பணியாளர்களுக்கான குறைதீர்ப்பு கூட்டம் நடத்தப்பட வேண்டும் என அனைத்து கோயில் நிர்வாகிகளுக்கும் உத்தரவிடப்படுகிறது.

இந்நிலையில் கோயில் பணியாளர்களுக்கான குறைதீர்ப்பு கூட்டம் நடத்தப்படும்போது கீழ்க்காணும் அறிவுரைகள் தவறாமல் பின்பற்றப்பட வேண்டும்.

* கோயில் பணியாளர்களுக்கான குறைதீர்ப்பு கூட்டம் நடத்தப்படும் நாள், நேரம், இடம் ஆகிய விவரங்கள் அனைத்து கோயில் பணியாளர்களும் அறியும் வகையில் அறிவிப்பு செய்யப்பட வேண்டும்.
* இயன்ற வரையில் கோயில் வளாகத்திற்குள்ளேயோ அல்லது  கோயிலுக்கு சொந்தமான இடங்களிலேயோ குறை தீர்ப்பு கூட்டம் நடத்தப்பட வேண்டும்.
* குறைதீர்ப்பு கூட்டத்தில் கோயில் பணியாளர்களால் தெரிவிக்கப்படும் கோரிக்கைகள் மற்றும் மனுக்கள் தனிப்பதிவேட்டில் பதிவு செய்யப்பட வேண்டும்.
* குறைதீர்ப்பு கூட்டத்தின்போது இணை ஆணையர்கள் மற்றும் உதவி ஆணையர்களால் ஆய்வு மேற்கொள்ள வேண்டும்.
* குறைதீர்ப்பு கூட்டத்தில் கோயில் பணியாளர்களால் தெரிவிக்கப்படும் கோரிக்கைகள் மீது 15 நாட்களுக்குள் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு,  அதன் நடவடிக்கை விவரம் தொடர்புடைய கோயில் பணியாளருக்கு எழுத்துப்பூர்வமாக தெரிவிக்கப்பட வேண்டும்.
* துறை அளவில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டிய இனங்களுக்கு கோயில் நிர்வாகிகள் முன்மொழிவினை உரிய அலுவலருக்கு ஒரு மாத காலத்திற்குள் அனுப்பி வைக்க வேண்டும்.
* தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து கோயில்களிலும் குறிப்பிட்ட காலவரையறைக்குள் குறைதீர்ப்பு கூட்டம் நடைபெறுவதை மண்டல இணை ஆணையர்கள் கண்காணித்து உறுதி செய்ய வேண்டும்.
* பிப்ரவரி மற்றும் ஆகஸ்ட் மாதத்தின் முதல் வாரத்தில் எத்தனை கோயில்களில் குறைதீர்ப்பு கூட்டம் நடந்தது என்ற விவரம் குறித்த அறிக்கை மண்டல இணை ஆணையர்களால் ஆணையர் அலுவலகத்திற்கு அனுப்ப வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Tags : Kumarakuruparan , Temple staff grievance meeting to be held twice a year: Order of Commissioner Kumarakuruparan
× RELATED கோயில் சொத்துக்களை முறைப்படுத்த...