×

துபாயில் மகள் தொழில் தொடங்க உதவி; சார்ஜா மன்னருடன் பினராய் நடத்திய ரகசிய பேச்சுவார்த்தை: சொப்னா பரபரப்பு குற்றச்சாட்டு

திருவனந்தபுரம்: தனது  மகளுக்கு துபாயில் ஐடி தொழில் தொடங்குவதற்காக சார்ஜா மன்னருடன் பினராய்  விஜயன் மூடப்பட்ட அறையில் ரகசிய பேச்சுவார்த்தை நடத்தினார் என்று சொப்னா  நீதிமன்றத்தில் அளித்து உள்ள பிரமாண வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளது  அடுத்த சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

கேரள  மாநிலம், எர்ணாகுளம் நீதிமன்றத்தில், முதல்வர் பினராய் விஜயன், அவரது  குடும்பத்தினர், முன்னாள் அமைச்சர், அரசு உயர் அதிகாரிகளுக்கு எதிராக சொப்னா ரகசிய வாக்குமூலம் கொடுத்து இருந்தார். இந்த ரகசிய வாக்கு  மூலத்தின் பல விவரங்கள் வெளியானதை தொடர்ந்து கேரள அரசியலில் பெரும்  பரபரப்பு நிலவி வருகிறது.

இந்நிலையில், ரகசிய வாக்குமூலத்துக்கு  முன்பு சொப்னா நீதிமன்றத்தில் ஒரு பிரமாண வாக்குமூலம் தாக்கல் செய்து  இருந்தார். அதிலும் பினராய் விஜயன், அவரது குடும்பத்தினர், முன்னாள்  அமைச்சர் ஜலீல், முன்னாள் சபாநாயகர் ராமகிருஷ்ணன் உள்பட பலருக்கு  எதிராக பல குற்றச்சாட்டுகளை தெரிவித்து உள்ளார். அதில் சில விவரங்கள்  வெளியாகி உள்ளன.

முன்னாள் சபாநாயகர் ராமகிருஷ்ணன்  தனது  நண்பருடன் சேர்ந்து துபாயில் ஒரு கல்லூரி தொடங்க திட்டமிட்டு இருந்தார்.  இதில் நிலம் வாங்குவது உள்பட பல தேவைகளுக்காக சார்ஜா மன்னரை சந்திக்க எனது  உதவியை கேட்டு இருந்தார். அப்போது திருவனந்தபுரத்தில் துணை தூதராக இருந்த  ஜமால் அல் சாபியின் உதவியுடன் சார்ஜா மன்னரை சந்திக்க ஏற்பாடு செய்து  கொடுத்தேன்.

இதற்கு பிரதிபலனாக துணை தூதருக்கு ராமகிருஷ்ணன்  கோடிக்கணக்கில் பணம் கொடுத்தார். முன்னாள் அமைச்சர் ஜலீலின் பினாமியாக  மும்பையை சேர்ந்த மாதவ வாரியர் செயல்பட்டு வருகிறார். இவர் மூலம் பல சட்ட  விரோத செயல்களில் ஜலீல் ஈடுபட்டு உள்ளார். முதல்வர் பினராய் விஜயன் தனது  மகள் வீணாவுக்கு துபாயில் ஒரு ஐடி தொழில் தொடங்க திட்டமிட்டு இருந்தார்.

சார்ஜா  மன்னர் கேரளா வந்தபோது ஒன்றிய அரசின் அனுமதியின்றி  இதுதொடர்பாக அவருடன்  மூடப்பட்ட அறையில் ரகசிய பேச்சுவார்த்தை நடத்தினார். அதன் பிறகு, சார்ஜா  மன்னரின் மருமகனும், அமீரக ஐடி அமைச்சருமான ஷேக் ஷாஹிமுடனும் பினராய்  விஜயன் ரகசிய பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த பேச்சுவார்த்தையின்  போது முதல்வர் பினராய் விஜயனின் அப்போதைய முதன்மை செயலாளர் சிவசங்கர்,  செயலாளர் நளினி நெட்டோ ஆகியோரும் உடன்
இருந்தனர். இவ்வாறு சொப்னா தனது பிரமாண வாக்குமூலத்தில் குறிப்பிட்டு உள்ளார். முதல்வர் பினராய் விஜயன் மற்றும் அவரது குடும்பத்தினர் குறித்து சொப்னா  தெரிவித்து உள்ள இந்த அதிரடி குற்றச்சாட்டுகள் கேரள அரசியலில் அடுத்த  சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

பரிசுக்கு மயங்காத மன்னரின் மனைவி: ‘சார்ஜா மன்னருடைய  மனைவியின் தலையீடு காரணமாக, பினராய் விஜயனின் திட்டம் நிறைவேறவில்லை. சார்ஜா  மன்னரின் மனைவிக்கு, பினராய் விஜயனின் மனைவி வைரம் மற்றும் விலை உயர்ந்த  பொருட்களை பரிசாக கொடுக்க முயற்சி செய்தார். ஆனால், அவர் அதை வாங்கவில்லை,’ என்றும் தனது வாக்குமூலத்தில் சொப்னா கூறியுள்ளார்.



Tags : Dubai ,Pinarai ,King , Help daughter start business in Dubai; Binarai's secret talks with King Sharjah: Sopna charged with sedition
× RELATED லக்கேஜ்களை மதுரையிலேயே விட்டு விட்டு...