கூடுவாஞ்சேரி அருகே மாடம்பாக்கம் ஏரியில் பழிக்குப்பழி வாங்க வீச்சரிவாளுடன் சுற்றிய வாலிபர் கைது: தப்பி ஓடிய நண்பருக்கு போலீஸ் வலை

கூடுவாஞ்சேரி: கூடுவாஞ்சேரி அருகே மாடம்பாக்கம் ஏரியில் வீச்சரிவாளுடன் பழிக்குப்பழி வாங்க சுற்றி திரிந்த வாலிபர் கைது செய்யப்பட்டார். தப்பி ஓடிய நண்பருக்கு போலீஸ் வலை வீசி வருகின்றனர். நந்திவரம்-கூடுவாஞ்சேரி நகராட்சிக்குட்பட்ட சிற்பி நகர் நேற்றுமுன்தினம் இரவில் 2 வாலிபர்கள் வீச்சரிவாளுடன் சுற்றி வருவதாக அப்பகுதி மக்கள் கூடுவாஞ்சேரி போலீசாருக்கு ரகசிய தகவல் கொடுத்தனர். உடனே, கூடுவாஞ்சேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் கீதா மற்றும் தனிப்படை போலீசார் அப்பகுதிக்கு விரைந்தனர்.  போலீசார் வருவதை கண்டதும் இருவரில் ஒரு வாலிபர் அங்கிருந்து தப்பித்து  ஓடிவிட்டார். இதில், மற்றொரு வாலிபரை போலீசார் சுற்றி வளைத்து பிடித்து. கூடுவாஞ்சேரி காவல் நிலையத்துக்கு அழைத்து சென்றனர்.

அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில், பிடிபட்ட வாலிபர் மாடம்பாக்கம், வள்ளலார் நகர் பகுதியை சேர்ந்த இம்ரான் (21).  தப்பி ஓடியது அவரது நண்பர் கார்த்திக் (21) என்பதும்,  இவர்கள் இருவரும் அதே பகுதியை சேர்ந்தவர்கள் என தெரிய வந்தது.   கடந்த ஆண்டு மாடம்பாக்கம் ஏரியில் இம்ரானின் தம்பிகள் இருவர் கொலை செய்யப்பட்டனர். இதற்கு பழிக்குப்பழி வாங்குவதற்காக இம்ரான் மற்றும் அவரது நண்பர் கார்த்திக் ஆகியோர் நேற்று முன்தினம் இரவு சிற்பி நகரில் வீச்சரிவாளுடன் சுற்றி வந்துள்ளனர். மேலும்,  அந்த  சாலையில் சென்று வருவோரிடம் செல்போன், பணம் மற்றும் வழிப்பறியில் ஈடுபட்டதும் விசாரணையில் தெரிய வந்தது.  இதுகுறித்த புகாரின் பேரில் கூடுவாஞ்சேரி போலீசார் வழக்கு பதிவு செய்து இம்ரானை கைது செய்தனர்.  செங்கல்பட்டு நீதிமன்றத்தில் நேற்று மாலை ஆஜர்படுத்தி கிளை சிறையில் அடைத்தனர். மேலும் தப்பி ஓடிய கார்த்திக்கை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். இதனால், அப்பகுதியில் நேற்று விடியற்காலையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories: