×

மாமல்லபுரம் அருகே 100 ஏக்கரில் உப்பு தயாரிக்கும் பணி தீவிரம்

மாமல்லபுரம்:  மாமல்லபுரம் அருகே உப்பு தயாரிக்கும் பணியில் உப்பள தொழிலாளர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.நாட்டில் குஜராத்துக்கு அடுத்தபடியாக உப்பு உற்பத்தி அதிகமாக செய்யப்படும் நகரம் தமிழகத்தின் கடலோர மாவட்டமான தூத்துக்குடி. தமிழகத்தில் தூத்துக்குடி, வேதாரண்யம், மரக்காணம் உள்ளிட்ட பகுதிகளில் உப்பளங்கள் உள்ளன. இவற்றில், உப்பளத்துக்கு பெயர்போன ஊர் தூத்துக்குடிதான். இங்கு, அதிகமான அளவு உப்பு உற்பத்தி செய்யப்படுகிறது. சர்வதேச, உப்பு உற்பத்தியில் சீனா முதலிடம் வகிக்கிறது. 2வது இடத்தில் அமெரிக்காவும், 3வது இடத்தில் இந்தியாவும் உள்ளன.மாமல்லபுரம் அடுத்த கொக்கிலமேடு, மணமை, கடம்பாடி உள்ளிட்ட பகுதிகளில் 100 ஏக்கர் பரப்பளவு கொண்ட உப்பளத்திற்கு கடல் நீர் கொண்டு வந்து பாத்திகளில் பாயச்செய்து காய வைத்து விடுவார்கள். கடல்நீர், வெயிலின் வெப்பம் காரணமாக நீராவியாகிவிடும். பின்னர், அடியில் உப்பு படிவுகளாக படிந்துவிடும். இந்த, உப்பு படிவுகளை கொண்ட பாத்திகள் உப்பளங்கள் என்ற பெயரில் அழைக்கப்படுகின்றன. இங்கு, ஆண்டுதோறும் ஜனவரி மாதம் உப்பு உற்பத்தி பணிகள் தொடங்கி அக்டோபர் மாதம் வரை நடைபெறும்.குறிப்பாக ஏப்ரல், மே, ஜூன் ஆகிய மூன்று மாதங்கள்தான் உப்பு உற்பத்தி உச்சத்தை தொடும் காலம். மேலும், பாத்தி கட்டுவது, உப்பை காய வைப்பது, வெட்டி எடுத்து சேர்த்து வைப்பது, லாரியில் லோடு ஏற்றுவது என எல்லா வேலையையும் தொழிலாளர்களே செய்கின்றனர். தொழிலாளர்களின், பாதுகாப்புக்காக கையுறையும், பூட்ஸ் ஷூவும் வழங்கப்படுகிறது. இங்கு, வேலை பார்க்கும் தொழிலாளர்களுக்கு ஆண்களுக்கு ரூ 700, பெண்களுக்கு ரூ500 ஊதியமாக வழங்கப்படுகிறது.

இதுகுறித்து, உப்பள தொழிலாளர் ஒருவர் கூறுகையில், ‘1991ம் ஆண்டில் உலகமயமாதல் கொள்கை வரும் வரை உப்பளங்களை ஒன்றிய அரசே குத்தகைக்கு விட்டு வந்தது. அதன், பின்னர்  தனியாரே உப்பளங்களுக்காக நிலங்களை வாங்கிப்பயன்படுத்துவது அதிகமானது. நாங்கள், தூத்துக்குடியில் இருந்து இங்கு வந்து வேலை பார்க்கிறோம். உழைப்புக்கு, ஏற்ற ஊதியம் முதலாளி தருகிறார். மாதத்தில் 20 நாட்கள்தான் வேலை செய்வோம். பின்னர், சொந்த ஊருக்கு சென்று விடுவோம். ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில் உப்பு உற்பத்தி அதிகமாக நடைபெறும். இங்கு, உற்பத்தி செய்யப்படும் உப்பு ஆந்திர மாநிலத்திற்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. மேலும், உப்பில் இருந்து நாம் அன்றாடம் பயன்படுத்தும் அமிர்தாஞ்சன் தைலம், விக்ஸ் தைலம், காஸ்டிக் சோடா, துணி சோப்பு உள்ளிட்ட 96 வகையான பொருட்களுக்கு பயன்படுத்தப்படுகிறது. தினமும், காலை 5 மணியில் இருந்து மதியம் 2 மணி வரை வேலை செய்வோம். இதனால், உடம்பில் இருந்து அதிகப்படியான வேர்வை வெளியேறுவதால் நீரிழிவு நோய், ரத்த கொதிப்பு உள்ளிட்ட நோய்கள் எங்களுக்கு வந்ததே இல்லை’ என்றார்.

Tags : Mamallapuram , Intensive salt production work on 100 acres near Mamallapuram
× RELATED கோவிந்தா, கோவிந்தா கோஷத்துடன்...