×

மாமல்லபுரம் பேரூராட்சியில் அவசர கவுன்சிலர்கள் கூட்டம்

மாமல்லபுரம்: மாமல்லபுரத்தில், 44வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி வரும் ஜூன் 27ம் தேதி முதல் ஆகஸ்ட் 10ம் தேதி வரை நடக்க உள்ளது. இதில், 187 நாடுகளில் இருந்து 2500க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்று விளையாட உள்ளனர். மேலும், மாமல்லபுரத்தை அழகுபடுத்தவும், பல்வேறு முன்னேற்பாடு வசதிகளை  செய்யவும் ரூ8 கோடி நிதியை கடந்த இரண்டு வாரத்துக்கு முன்பு விடுவித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. இந்த நிதியில், பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் சாலைகள் பழுதுபார்த்தல், ஈசிஆர் நுழைவு பகுதியில் இருந்து கோவளம் சாலையில் நடைபாதை அமைத்தல், புதிதாக மின் விளக்குகள் பொருத்துதல், சோழி பொய்கை குளத்தை தூர்வாரி சீரமைத்தல், நவீன கழிப்பறைகள் மற்றும் குடிநீர் தொட்டியுடன் கூடிய குடிநீர் சுத்திரிப்பு நிலையம் உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகள் மேற்கொண்டு, செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கு வரும் வெளிநாட்டினர் பார்த்து பிரமிக்கும் வகையில் அழகுபடுத்த மாமல்லபுரம் பேரூராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இந்நிலையில், மேற்கண்ட பணிகளை மேற்கொள்ள கடந்த 15ம் தேதி ரூ8 கோடிக்கு டெண்டர் வைக்கப்பட்டது. இதில், ரூ5 கோடியே 25 இலட்சம் டெண்டர் எடுக்கப்பட்டது. மீதமுள்ள, ரூ2 கோடியே 75 லட்சத்துக்கு யாரும் டெண்டர் எடுக்கவில்லை. இந்த டெண்டர்களை மாமல்லபுரம் பேரூராட்சி செயல் அலுவலர் கணேஷ்  முழுமையாக டெண்டர் விட்டபோதும். ரூ5 கோடியே 25 இலட்சம் டெண்டர் மட்டுமே எடுக்கப்பட்டது.

மேலும், டெண்டருக்கான நேரமும் முடிந்து விட்டது. இந்நிலையில், நேற்று மதியம் பேரூராட்சி தலைவர் வளர்மதி எஸ்.வந்த்ராவ் தலைமையில் டெண்டர் கோராத தொகைக்கு பேரூராட்சி நிர்வாகமே பணிகள் மேற்கொள்ள அவசர, அவசரமாக கவுன்சிலர் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது. கூட்டத்தில், தலைவர் உட்பட அதிமுக கவுன்சிலர்கள் 5 பேர், திமுக கவுன்சிலர் 5 பேர், மதிமுக கவுன்சிலர் ஒருவர் என மொத்தம் 11 பேர் வந்தனர். இதில், துணை தலைவர் ராகவன் உட்பட 4 அதிமுக கவுன்சிலர் பங்கேற்காதது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதில், 14வது வார்டு மதிமுக கவுன்சிலர் துர்காசினி சத்யா முறையான அழைப்பு இல்லை என திடிரென வெளிநடப்பு செய்தார். மேலும், கூட்டத்தில் கலந்து கொண்ட திமுக கவுன்சிலர்கள் எந்தெந்த பணிகள் மேற்கொள்ளப்படுகிறது என இதுவரை தெரியபடுத்தவில்லை.  அவசர கூட்டம் நடத்த தற்போது அவசியமே இல்லை என கூறி கொந்தளித்தனர். இதனால், சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து, பேரூராட்சி நிர்வாகமே பணிகள் மேற்கொள்ள ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


Tags : Emergency Councilors Meeting ,Mamallapuram Municipality , Emergency Councilors Meeting at Mamallapuram Municipality
× RELATED சிபிஐ விசாரணைக்கு ஆஜராக டெல்லி புறப்பட்டார் தவெக தலைவர் விஜய்