சிதம்பர சுவாமிகள் கோயில் மடத்துக்குளத்தில் கலக்கும் கழிவுநீர்: பக்தர்கள் வேதனை

திருப்போரூர்: திருப்போரூர் சிதம்பர சுவாமிகள் மடத்துக்குளத்தில் கலங்கும் கழிவுநீரால் பக்தர்கள் வேதனை அடைந்தனர்.திருப்போரூர் கந்தசுவாமி கோயில் கடந்த 390 ஆண்டுகளுக்கு முன் சிதம்பர சுவாமிகளால் உருவாக்கப்பட்டது. சிதம்பர சுவாமிகள் கண்ணகப்பட்டு என்ற இடத்தில் மடம் ஒன்றை உருவாக்கி, அதில் தங்கியிருந்தபடி பூஜைகளை நடத்தி வந்தார். பின்னர், அவர் சமாதி அடைந்ததை அடுத்து, சிதம்பர சுவாமிகள் மட வளாகத்திலேயே அவரை தொடர்ந்து வந்த ஆதீனங்களின் உடல்கள் புதைக்கப்பட்டு வழிபாடுகள் நடைபெற்று வருகின்றன. ஆண்டுதோறும், சிதம்பரசுவாமிகள் குருபூஜை மற்றும் மாதந்தோறும் பவுர்ணமி வழிபாடு போன்றவை சிதம்பர சுவாமிகள் பக்தர்களால் நடத்தப்பட்டு வருகின்றன.

இந்த மடத்தையொட்டி, 200 ஆண்டுகளுக்கு முன்பு திருக்குளம் உருவாக்கப்பட்டது.  இதிலிருந்து, புனித நீர் மடத்திற்கு எடுத்து செல்லப்பட்டு வழிபாடு நடத்தப்பட்டது. காலப்போக்கில் மடத்து குளத்தை யாரும் பராமரிக்காததால் குளக்கரை படிகளாக இருந்த கருங்கற்கள் திருட்டு போயின. மக்கள் தொகை பெருக்கத்தால் அப்பகுதியில் ஏராளமான வீடுகள் உருவானது. இவ்வாறு கட்டப்பட்ட வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் மடத்து குளத்திற்குள் செல்லும் வகையில் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு கால்வாய் அமைக்கப்பட்டது. இதனால், குளத்தின் நீர் மாசடைந்து சாக்கடையாக மாறிவிட்டது.

மடத்துக்குளத்தை பராமரிக்க வேண்டிய கந்தசுவாமி கோயில் நிர்வாகம் எட்டிக்கூட பார்க்கவில்லை. குளத்தில் கழிவுநீர் கலந்ததால் இப்பகுதியில் கொசு உற்பத்தியாகி குழந்தைகளுக்கு சளி, காய்ச்சல், தோல் நோய் ஏற்படுவதாக இப்பகுதி மக்கள் புகார் கூறினர். இதையடுத்து, திருப்போரூர் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் குளத்திற்குள் விடப்படும் கழிவுநீரை திசை மற்றும் வகையில் மாற்று கால்வாய் திட்டம் ஒன்றை உருவாக்கி மன்றத்தின் ஒப்புதல் பெறப்பட்டு பணிகளுக்கான டெண்டர் விடப்பட்டது. ஆனால், இன்னும் பணிகள் தொடங்காததால் மடத்துக்குளம் மாசடைந்து வருகிறது. ஆகவே, விரைந்து கால்வாய் பணிகளை முடித்து மாசடைந்த குளத்தை தூர் வாரி சீரமைக்க வேண்டுமெனவும், குளத்தின் ஒரு பக்கத்தில் உள்ள கான்கிரீட் கட்டுமானத்தை அகற்றி பழைய முறைப்படி கருங்கல் படிக்கட்டுகள் அமைக்க வேண்டுமெனவும்

பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: