×

ஜமாபந்தியில் விண்ணப்பித்திருந்தனர் இருளர் இன மக்கள் 13 பேருக்கு உடனடியாக ஆதார் அட்டை

திருவள்ளூர்: திருவள்ளூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஜமாபந்தி நிகழ்ச்சியில் ஆதார் கேட்டு விண்ணப்பித்த இருளர் இன மக்களுக்கு ஒரு சில நாட்களில் ஆதார் அட்டை வழங்கப்பட்டது. அரசின் சலுகைகளை பெற முடியாமல் தவித்து வந்த தங்களுக்கு முதல்வர் அறிவிப்பால் உடனடியாக வழங்கியதற்கு இருளர் இன மக்கள் முதல்வருக்கு நன்றியினை தெரிவித்துக் கொண்டனர். திருவள்ளூர் மாவட்டத்தில் இருளர் இன மக்களுக்கு ஆதார் அட்டை, குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டை எந்த சான்றிதழ்களும் இல்லாமல் ஆண்டாண்டு காலமாக அரசின் எந்த சலுகைகளையும் அனுபவிக்க முடியாமல் தவித்து வந்தனர். இதனால் தங்களுக்கு ஆதார் அட்டை, குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டை  உள்ளிட்டவைகள் குறித்து தொடர்ந்து அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர். ஆனாலும் இருளர் இன மக்களுக்கு சான்றிதழ்கள் கிடைப்பது அரிதாகவே இருந்தது.
இந்நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் இருளர் இன மக்களின் அத்தியாவசிய தேவைகளான குடும்ப அட்டை, ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை ஆகியவற்றை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என கடந்த சில தினங்களுக்கு முன்பு அறிவித்திருந்தார். அதன்படி திருவள்ளூர் மாவட்டத்தில் தற்போது ஜமாபந்தி நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் திருவள்ளூர் அடுத்த புது வல்லூர் கிராமத்தில் வசித்து வரும் 11 குடும்பத்தை சேர்ந்த 13 இருளர் இன மக்கள் தங்களுக்கு ஆதார் அட்டை கேட்டு விண்ணப்பித்திருந்தனர்.அவர்களின் கோரிக்கையை ஏற்று திருவள்ளூர் வட்டாட்சியர் ஏ.செந்தில்குமாரின் உத்தரவின்பேரில் மண்டல துணை வட்டாட்சியர் சுந்தர், வருவாய் ஆய்வாளர் விஷ்ணுபிரியா, கிராம நிர்வாக அலுவலர் அகிலா ஆகியோர் இதுகுறித்து விரைந்து நடவடிக்கை மேற்கொண்டனர். இதனையடுத்து, நேற்று நடைபெற்ற ஜமாபந்தி நிகழ்ச்சியின்போது இருளர் இன மக்களுக்கு ஆதார் அட்டை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளரும்(தேர்தல்), ஜமாபந்தி அதிகாரியுமான முரளி மற்றும் வட்டாட்சியர் ஏ.செந்தில்குமார் ஆகியோர் இருளர் இன மக்கள் 13 பேருக்கு ஆதார் அட்டையை வழங்கினர். அப்போது தனி வட்டாட்சியர் பாண்டியராஜன், தலைமை நில அளவையர் செந்தில் ஆகியோர் உடனிருந்தனர்.தங்களுக்கு ஆதார் அட்டையை வழங்கிய தமிழக முதல்வருக்கு தங்களது நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொண்டனர்.



Tags : jamabandi , Aadhar card immediately for 13 people of dark ethnicity who had applied in Jamabandhi
× RELATED அணைக்கட்டு தாலுகாவில் 2ம் நாள்...