காதர்வேடு கிராமத்தில் கொம்மாத்தம்மன் கோயில் திருவிழா: படையல் வைத்து பக்தர்கள் வழிபாடு

ஊத்துக்கோட்டை: காதர்வேடு கிராமத்தில் கொம்மாத்தம்மன் ஆலய திருவிழா 5 நாட்களுக்கு வெகு விமர்சையாக நடைபெற்றது. எல்லாபுரம் ஒன்றியம் காதர்வேடு கிராமத்தில் கிராம தேவதை கொம்மாத்தம்மன் ஆலயம் உள்ளது. இக்கோயிலில் ஆண்டுதோறும் வைகாசி மாதத்தில் ஆலயத்தின் திருவிழா தொடர்ந்து 5 நாட்கள் வெகு விமர்சையாக நடைபெறும். அதன்படி கடந்த 8ம் தேதி  திருவிழா கோலாகலமாக திருவிழா தொடங்கி அம்மனுக்கு பால், தயிர், சந்தனம், குங்குமம், மஞ்சள் கொண்டு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது. இதில் கிராம பெண்கள் ஆலய வளாகத்தில் பொங்கல் வைத்தல், 12ம் தேதி கூழ்வார்த்தல், 13ம் தேதி திருவிழாவை முன்னிட்டு பந்தக்கால் நடுதல், 15ம் தேதி இரவு 9 மணியளவில் உற்சவரை வாகனத்தின் மூலம் வைத்து பல்வேறு மலர்களால் அலங்காரம் செய்து திருவீதி உலா நிகழ்ச்சி ஆகியவை நடைபெற்றது. பின்னர் தெருக்கூத்து நடைபெற்றது. தொடர்ந்து 16ம் தேதி அம்மனுக்கு படையல் படைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு வண்ண மலர்களால் அலங்காரம் செய்து பின்னர் உற்சவரை டிராக்டர் மூலம் மேளதாளங்கள் முழங்க அம்மன் திருவீதி உலா நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கிராமத்தை சேர்ந்த பெண்கள் அம்மனுக்கு பல்வேறு விதமான திண்பண்டங்கள் மற்றும் பழங்களை கொண்டு படையல் வைத்து அம்மனை வழிபட்டனர். நிகழ்ச்சியில் திமுக எல்லாபுரம் வடக்கு ஒன்றிய செயலாளர் பி.ஜே.மூர்த்தி, ஏ.வி.ராமமூர்த்தி, சத்தியவேலு, முனிவேல், தனசேகர், ரவிக்குமார், சிவாஜி உள்பட பலர் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஊராட்சி மன்ற தலைவர் சம்பத், துறை தலைவர் சரிதா தட்சிணாமூர்த்தி, ஊர் நிர்வாகி தனசேகரன், மற்றும் கிராம பொதுமக்கள் மிக சிறப்பாக செய்திருந்தனர்.

Related Stories: