×

ராணுவத்தில் அக்னி வீரர்கள் சேர்க்கை எப்படி நடக்கும்?..அக்னிபாத் திட்டம் ஒரு பார்வை!!!சாதக, பாதகங்கள் குறித்த முழு விவரம்

புதுடெல்லி: உலகில் உள்ள நாடுகள் ஒவ்வொரு ஆண்டும் தங்களின் ராணுவத்துக்கான நிதியை அதிகரித்து கொண்டே வருகிறது. இதில் இந்தியாவும் விதிவிலக்கல்ல. ராணுவ செலவு குறித்த ஆய்வு அறிக்கையை ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதன்படி, கடந்த ஓராண்டில் மட்டும் உலக நாடுகள், தங்களின் ராணுவத்துக்கு 2.1 டிரில்லியன் டாலரை செலவு செய்திருக்கிறது. உலகிலேயே ராணுவத்துக்காக அதிகம் செலவு செய்வதில் அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தில் இருக்கிறது. கடந்தாண்டில் மட்டும் 801 பில்லியன் டாலரை செலவு செய்தது. சீனா, 293 பில்லியன் டாலர் செலவிட்டு 2ம் இடத்தில் உள்ளது. இந்தியா, கடந்தாண்டு மட்டும் ராணுவத்துக்காக 76.6 பில்லியன் டாலர் செலவு செய்துள்ளது. 2012-ம் ஆண்டில் இருந்து இந்தியா, தனது ராணுவத்துக்கு செலவிடும் தொகை 33 சதவீதம் அதிகரித்துள்ளது.

இந்நிலையில், ராணுவத்தில் தேவையில்லா செலவை குறைக்க ஒன்றிய பாதுகாப்பு துறை பல்வேறு கட்ட ஆலோசனைகளை நடத்தி வந்தது. அதன்படி, அக்னிபத் என்ற புதிய திட்டத்துக்கு ஒன்றிய அமைச்சரவை குழு ஒப்புதல் வழங்கியுள்ளது. அக்னிபாத்.. ஒரு பார்வை: ராணுவத்தில் புதிதாக சேர விரும்புவோருக்கான மிக முக்கியமான அறிவிப்பை ஒன்றிய அரசு அறிவிக்க உள்ளது. இந்த புதுவிதமான ராணுவ பணி நியமன முறையை டூர் ஆஃப் தி டூட்டி என்று அழைக்கிறார்கள். இத்திட்டத்திற்கு அக்னிபத் என்று பெயரிடப்பட்டுள்ளது. இதில் தேர்வாகும் இளைஞர்கள் அக்னிவீரர்கள் என அழைக்கப்படுவார்கள். இந்திய ராணுவத்தில் இது ஒரு புதுவிதமான முயற்சி. தேர்வாகும் வீரர்கள் 4 ஆண்டுகள் பணியில் இருப்பார்கள்.

அதன் முடிவில் அவர்களுக்கு ரூ.10 லட்சம் (வரிப்பிடித்தம் இல்லாமல்) வழங்கப்படும். சான்றிதழ்களும் வழங்கப்படும். இந்த பணிநியமன திட்டம் மூலம் 45,000 முதல் 50,000 வீரர்களை நியமிக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதிகாரி ரேங்குக்கு கீழ் உள்ள பதவியில் இவர்கள் நியமிக்கப்படுவார்கள். 6 மாத இடைவெளியில் முப்படைகளுக்குமான வீரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 4 ஆண்டுகள் பணிக்கு பின்னர் இவர்களில் 25 சதவீதம் பேர் மட்டும் மீண்டும் பணியில் அமர்த்தப்படுவார்கள். ஆனால் மீண்டும் பணி என்பதை இன்னும் உறுதிபடுத்தவில்லை. இந்த முறை மூலம் நியமிக்கப்படும் வீரர்கள் 6 மாதம் பயிற்சி பெறுவார்கள். 3.5 ஆண்டுகள் பணி புரிவார்கள்.

கல்வி தகுதி: குறைந்தபட்ச கல்வித்தகுதி 10ம் வகுப்பு தேர்ச்சி. 4 ஆண்டுகள் பணி முடித்து ஓய்வு பெறும் அக்னிவீரர், 12வது தேர்ச்சி பெற்றவராக கருதப்பட்டு, அதற்கான சான்றிதழும் பெறுவார். வயது வரம்பு: பதினேழரை முதல் 21 வயது வரை, பணிக்காலம்: 4 ஆண்டுகள், காலி பணியிடங்கள்: 45,000 முதல் 50,000 (ஆண்டுதோறும்), பயிற்சி காலம்: 6 மாதங்கள், சம்பளம்: ரூ.30,000-ரூ.40,000/ அக்னிவீரர்களுக்கான கல்வி தகுதி, பல்வேறு பிரிவுகளில் சேர்வதற்கான தகுதி நடைமுறையில் உள்ளது. ஜெனரல் டூட்டி (ஜிடி) சிப்பாய்க்குள் நுழைவதற்கு, கல்வித்தகுதி 10ம் வகுப்பு ஆகும்.

விண்ணப்பிக்கும் முறை: ஆயுதப்படைகள் உள்பட பல்வேறு வளாகங்களில் ஆள்சேர்ப்பு பேரணிகள் மற்றும் சிறப்பு முகாம்களை நடத்தும். ஆன்லைன் மூலம் பதிவு செய்யப்படும். தொழில்துறை பயிற்சி நிறுவனங்கள் மற்றும் தேசிய திறன் தகுதிகள் கட்டமைப்பு போன்ற அங்கீகரிக்கப்பட்ட தொழில்நுட்ப நிறுவனங்களில் சிறப்பு முகாம்கள் மற்றும் வளாக நேர்காணல்கள் நடத்தப்படும். இதற்கான ஆட்கள் தேர்வு அடுத்த 90 நாட்களில் ஆன்லைன் மூலம் முறையில் நடக்க உள்ளது. இந்த திட்டத்துடன் தொடர்புடைய காலியிடங்கள் மற்றும் சேரும் செயல்முறை அந்தந்த ஆயுதப்படை இணையதளங்களில் கிடைக்கும். அந்த இணையதளங்கள்: joinindianarmy.nic.in joinindiannavy.gov.in careerindianairforce.cdac.in

எப்போது தொடங்கும்: இத்திட்டம் ஜூன் 14ம் தேதி தொடங்கப்பட்டது. இதற்கான ஆட்சேர்ப்பு செயல்முறை 90 நாட்களுக்குள் தொடங்கும். அக்னிவீரர்கள் விருப்பம்போல் தற்காலிகமாக ராணுவத்தில் சேவை செய்துவிட்டு இயல்புக்கு திரும்பலாம். டூர் ஆப் டூட்டி திட்டத்தை ராணுவத்தில் உள்ள வீரர்கள் பற்றாக்குறையை சரி செய்ய கொண்டு வந்துள்ளதாக அரசு தரப்பு கூறுகிறது. மேலும் இதன் மூலம் நாட்டில் வேலைவாய்ப்பின்மை பிரச்னையும் குறையும் என கணிக்கப்பட்டுள்ளது.

ஆயுள் காப்பீடு: அக்னிவீரர்கள் ஆண்டுகளுக்கு ரூ.48 லட்சம் ஆயுள் காப்பீடு பெறுவர்.
ஓய்வு பெறும்போது கிடைக்கும் நன்மைகள்: பணி ஓய்வு பலன்: ரூ. 10-12 லட்சம் (வரிச்சலுகையுடன்) டூர் ஆப் டூட்டி திட்டம் மூலம் நியமிக்கப்படும் பணியாளருக்கு ரூ.30,000 முதல் ரூ.40,000 வரை சம்பளம் நிர்ணயிக்கப்பட்டாலும், இதில் 30 சதவீதம் பிடித்தம் செய்யப்படும். அரசாங்கமும் அதற்கு சமமான தொகையை செலுத்தி அதை சேவா நிதி திட்டத்தின் கீழ் சேமித்து வைக்கும். ரூ.10 லட்சம் முதல் ரூ.12 லட்சம் வரையிலான தொகை 4 ஆண்டுகள் பணி முடியும்போது வழங்கப்படும். இந்த திட்டத்தின் மூலம் ராணுவத்தில் பணியாற்றும் அனுபவத்தை பெற விரும்பும் இந்திய இளைஞர்கள் குறுகிய காலம் ராணுவத்தில் பணியாற்றலாம். இதுதவிர அக்னிவீரர் 3 ஆண்டுகளுக்கு ரூ.18 லட்சம் வரை கடனும் பெறலாம். எனினும், அதன் விதிமுறைகள் இன்னும் கூறப்படவில்லை.

ஆயுதப்படையில் நிரந்தர வேலை: 25 சதவீத அக்னி வீரர்களுக்கு மட்டுமே ராணுவத்தில் நிரந்தர நியமனம் வழங்கப்படும். அதுவும் அவர்களின் தகுதி மற்றும் செயல்திறன் அடிப்படையில் முடிவு செய்யப்படும். 4 ஆண்டுகள் சேவைக்கு பிறகு: ஒன்றிய அரசால் அறிவிக்கப்பட்டுள்ள அக்னிபத் திட்டத்தின் கீழ், ராணுவத்தில் பணிபுரியும் வீரர்களுக்கு 4 ஆண்டு பணி நிறைவுக்கு பின்னர் வேறு பணி வழங்குவது குறித்து ஒன்றிய தகவல் தொடர்புத்துறை சார்பில் டெல்லியில் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில், தொலை தகவல் தொடர்பு சேவை வழங்கும் ஏர்டெல், பிஎஸ்என்எல், ரிலையன்ஸ் ஜியோ, வோடபோன்- ஐடியா உள்ளிட்ட நிறுவனங்களின் பிரதிநிதிகள், தகவல் தொடர்பு துறையின் மூத்த அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

அக்னிபத் திட்டத்தின் கீழ் ராணுவத்தில் பணியாற்ற உள்ள வீரர்களின் திறமை, கட்டுப்பாடு, தொழில்திறன்கள் ஆகியவற்றை தகவல் தொடர்புத்துறையில் குறிப்பாக தொலை தகவல் தொடர்பு சேவைகளில் எவ்வாறு பயன்படுத்துவது என்பது குறித்த வழிமுறைகள் பற்றி கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. கண்ணாடி இழை பராமரிப்பு, குளிர்சாதனங்கள் பராமரிப்பு, கடைக்கோடிக்கு தொடர்பளிக்கும் அடிப்படை கட்டமைப்பு வழங்குதல், வீடுகளுக்கு கண்ணாடி இழை அமைத்தல் போன்ற வேலைவாய்ப்புக்குரிய பகுதிகள் இந்த விவாதத்தின்போது கண்டறியப்பட்டதாக ஒன்றிய அரசு வட்டார தகவல்கள் தெரிவித்துள்ளன.

தியாகி என்றால் என்ன நடக்கும்:
ஒரு அக்னிவீரர் வீரமரணம் அடைந்தால், ரூ.1 கோடி இழப்பீடு வழங்கப்படும். இதனுடன், அவரது மீதமுள்ள சேவைக்கான சம்பளமும் கிடைக்கும். ராணுவத்திற்கு என்ன பயன்: 2022-23 பாதுகாப்பு பட்ஜெட் 5.25 லட்சம் கோடியாக இருந்தது. இதில், ரூ.1.19 லட்சம் கோடி ஓய்வூதியத்திற்காகவும், அதே அளவு சம்பளத்திற்காகவும் செலவிடப்படும். ராணுவத்தின் எஞ்சிய தேவைகள் சுமார் மூன்றரை லட்சம் கோடியில் பூர்த்தி செய்யப்படும். அக்னிவீரர் திட்டம் ஓய்வூதியம் மற்றும் சம்பளத்திற்கான செலவில் பெரும் பகுதியை மிச்சப்படுத்தும், ராணுவத்திற்கு நல்ல ஆயுதங்கள் மற்றும் தொழில்நுட்பத்தை வழங்குவதற்கு இதனை செலவிட முடியும்.

Tags : Agni , Recruitment of Agni Soldiers in the Army, Agnipath Project,
× RELATED அக்னி நட்சத்திர காலம் துவங்கும்...