வாடகைக்கு பணியாற்றும் ராணுவம் நமக்கு தேவையில்லை; அக்னிபாத் திட்டத்தை திரும்ப பெற வேண்டும்: பகவந்த் சிங் மான் பேட்டி

சண்டிகர்: ராணுவ வீரர்களை வாடகைக்குப் பணியமர்த்த முடியாது என பஞ்சாப் முதல்வர் பகவந்த் சிங் மான் விமர்சனம் செய்துள்ளார். ஒன்றிய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கடந்த 14ம் தேதி ராணுவத்தில் ஆள் சேர்ப்பதற்கான புதிய திட்டமான `அக்னிபாத்’ என்னும் திட்டத்தை அறிமுகப்படுத்தினார். அரசின் இந்தத் திட்டத்தை ஆதரித்தும் விமர்சித்தும் பலர் கருத்து தெரிவித்துவருகின்றனர். இந்த திட்டத்திற்கு எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளன. அதோடு இந்த திட்டத்திற்கு எதிராக பீகார், உத்தரபிரதேசம், மத்திய பிரதேசம்  உள்ளிட்ட 8 மாநிலங்களில் இளைஞர்கள் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். பல இடங்களில் வன்முறை சம்பவங்களும் நிகழ்ந்துள்ளன.

இந்நிலையில் இது குறித்து பஞ்சாப் முதல்வர் பகவந்த் சிங் மான் கருத்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர்; ராணுவ வீரர்களை வாடகைக்குப் பணியமர்த்த முடியாது. 21 வயதிலேயே ஓர் இளைஞரை முன்னாள் படை வீரராக எப்படி ஆக்க முடியும்? கடினமான சூழல்களில் நாட்டைப் பாதுகாக்கும் பணியில் ஈடுபடுபவர்கள் ராணுவ வீரர்கள். அரசியல்வாதிகள் ஒருபோதும் ஓய்வு பெற மாட்டார்கள்; ராணுவ வீரர்களும் மக்களும் தான் ஓய்வு பெறுவார்கள். வாடகைக்கு பணியாற்றும் ராணுவம் நமக்கு தேவையில்லை; அக்னிபாத் திட்டத்தை கட்டாயம் திரும்ப பெற வேண்டும் இவ்வாறு கூறினார்.

Related Stories: