×

தண்டவாளத்தில் விரிசல் சென்னை ரயில் தப்பியது

ராமநாதபுரம்: ராமநாதபுரம் அருகே தண்டவாளத்தில் ஏற்பட்ட விரிசல் உரிய நேரத்தில் கண்டுபிடிக்கப்பட்டதால் சென்னை-ராமேஸ்வரம் விரைவு ரயில் விபத்தில் இருந்து தப்பியது. சென்னை-ராமேஸ்வரம் போர்ட் மெயில் என அழைக்கப்படும் (வண்டி எண்: 16851) விரைவு ரயில்  இன்று காலை 7.10 மணியளவில் ராமநாதபுரம் வந்தது. இங்கிருந்து ராமேஸ்வரம் கிளம்பிய அந்த ரயில் வாலாந்தரவை பகுதியில் வந்து கொண்டிருந்தது.

வாலாந்தரவை ரயில்வே ஸ்டேஷனுக்கு ரயில் வந்தபோது தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டிருந்ததை கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த கீ மேன் வீரபெருமாள் கண்டறிந்தார். தூரத்தில் ரயில் வருவதை அறிந்த அவர் சிவப்பு கொடி காட்டி ரயிலை நிறுத்தினார். இதுகுறித்து ரயில்வே பொறியியல் தொழில்நுட்ப பிரிவு அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து ரயில்வே ஊழியர்களால் விரிசல் துரிதமாக சரி செய்யப்பட்டது. 45 நிமிட நேரத்திற்கு பிறகு ரயில் மீண்டும் கிளம்பியது. உரிய நேரத்தில் விரிசல் கண்டுபிடிக்கப்பட்டதால் விபத்தில் இருந்து ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் ரயில் தப்பியது.



Tags : Chennai train , Rail cracks, Chennai train,
× RELATED மேம்பால பணி காரணமாக தியாகராயர் நகரில் போக்குவரத்து மாற்றம்