×

திருவண்ணாமலைக்கு இன்று எடப்பாடி வருகை கழக பொதுச்செயலாளரே என பிளக்ஸ் பேனர்: ‘நிரந்தர பொதுச்செயலாளரே’ என கோஷம்

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்க இன்று எடப்பாடி பழனிச்சாமி வந்தார். ‘கழகப் பொதுச்செயலாளரே வருக’ என்று பல இடங்களில் அவருக்கு பிளக்ஸ்பேனர், போஸ்டர் வைத்திருந்தனர். அவரை நிரந்தர பொதுச்செயலாளரே என அவரது ஆதரவாளர்கள் கோஷமிட்டனர். வரவேற்பு போஸ்டர்களில் ஓபிஎஸ்சின் பெயர் மற்றும் படங்களை புறக்கணித்தனர்.

அதிமுக பொதுக்குழு வரும் 23ம்தேதி கூடுகிறது. இதை முன்னிட்டு நடந்த மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் ஒற்றை தலைமை பிரச்னை விஸ்வரூபம் எடுத்துள்ளது. இதில் பெரும்பாலானோர் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவு தரும் வகையில் பேசியதால் ஓ. பன்னீர்செல்வம் அதிர்ச்சியடைந்தார். அதன்பின்னர் இப்பிரச்னை ஒட்டுமொத்த அதிமுகவில் பூதாகரமாக வெடித்தது. நேற்று இரவு ஓபிஎஸ் அளித்த பேட்டியின் போது ஒற்றை தலைமை தீர்மானத்திற்கு என் அனுமதி தேவை, பொதுச்செயலாளர் அந்தஸ்து என்பது ஜெயலலிதாவுக்கு செய்யும் துரோகம் என பகிரங்கமாக எடப்பாடிக்கு எச்சரிக்கை விடுத்தார். இதனிடையே நேற்று காலை சேலத்திற்கு சென்ற எடப்பாடி பழனிசாமி இன்று திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் நடைபெறும் கோயில் கும்பாபிஷேகத்தில் பங்கேற்க வந்தார்.

இதற்காக சேலத்தில் இருந்து திருவண்ணாமலை மாவட்ட எல்லையான காட்டாம்பூண்டிக்கு வந்தார். அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது, ‘ஒற்றை தலைமையே வாழ்க, கழகத்தின் நிரந்தர பொதுச்செயலாளரே வருக’ என அவரது ஆதரவாளர்கள் முழக்கமிட்டனர். இதையடுத்து எடப்பாடி பழனிசாமி, கலசப்பாக்கம், போளூர் வழியாக ஆரணிக்கு சென்றார். அவரது வருகையொட்டி மாவட்டத்தில் பல இடங்களில், வைக்கப்பட்டுள்ள பேனர்கள் மற்றும் போஸ்டர்களில், ‘கழகப் பொதுச்செயலாளரே’, ‘கழகத்தின் நிரந்தர பொதுச்செயலாளரே’, ‘அதிமுகவை 100 ஆண்டுகள் வழிநடத்த உள்ள தலைவரே’, ‘ஜெயலலிதாவின் மறு உருவமே’ என குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் ஓபிஎஸ்சின் படமோ அல்லது பெயரோ இடம்பெறவில்லை. கட்சியில் எடப்பாடி பழனிச்சாமிக்கு முக்கியத்துவம் தரும் வகையில் இதுபோன்ற போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளதாகவும்,  ஓபிஎஸ்சின் பெயர் புறக்கணிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது.


வேலுமணி மவுன சிரிப்பு
ஆரணியில் நடந்த கோயில் கும்பாபிஷேகத்தில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி கலந்துகொண்டார். அவரிடம், திருவண்ணாமலை மாவட்டத்தில பல இடங்களில் கழக நிரந்தர பொதுச்செயலாளரே என எடப்பாடி பழனிசாமி பெயரை குறிப்பிட்டு பேனர்கள் மற்றும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளதே? என நிருபர்கள் கேட்டனர். ஆனால் அதற்கு அவர் மவுனமாக சிரித்துவிட்டு காரில் ஏறி சென்றார்.



Tags : Thiruvanamalai ,Tiruvanamalai ,Plex , Visit to Thiruvannamalai, Edappadi, General Secretary,
× RELATED திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே...