மகளுக்கு துபாயில் தொழில் தொடங்குவதற்காக சார்ஜா மன்னருடன் பினராயி விஜயன் ரகசிய பேச்சுவார்த்தை நடத்தினார்: சொப்னா அதிர்ச்சி தகவல்

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் எர்ணாகுளம் நீதிமன்றத்தில், முதல்வர் பினராயி விஜயன், அவரது குடும்பத்தினர், முன்னாள் அமைச்சர், அரசு உயர் அதிகாரிகளுக்கு எதிராக தங்கராணி சொப்னா ரகசிய வாக்குமூலம் கொடுத்து இருந்தார். இந்த ரகசிய வாக்கு மூலத்தில் பல விவரங்கள் வெளியானதை தொடர்ந்து கேரள அரசியலில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.

இந்த நிலையில் ரகசிய வாக்குமூலத்துக்கு முன்பு சொப்னா நீதிமன்றத்தில் ஒரு பிரமாண வாக்குமூலம் தாக்கல் செய்து இருந்தார். அதிலும் பினராயி விஜயன், அவரது குடும்பத்தினர், முன்னாள் அமைச்சர் ஜலீல், முன்னாள் சபாநாயகர் ஸ்ரீராமகிருஷ்ணன் உள்பட பலருக்கு எதிராக பல குற்றச்சாட்டுகளை தெரிவித்து உள்ளார்.

அதுகுறித்து கூறப்படுவதாவது:

முதல்வர் பினராயி விஜயன் தனது மகள் வீணாவுக்கு துபாயில் ஒரு ஐடி தொழில் தொடங்க திட்டமிட்டு இருந்தார்.சார்ஜா மன்னர் கேரளா வந்தபோது ஒன்றிய அரசின் அனுமதியின்றி இதுதொடர்பாக அவருடன் மூடப்பட்ட அறையில் ரகசிய பேச்சுவார்த்தை நடத்தினார். அதன் பிறகு சார்ஜா மன்னரின் மருமகனும், அமீரக ஐடி அமைச்சருமான ஷேக் ஷாஹிமுடனும் பினராயி விஜயன் ரகசிய பேச்சுவார்த்தை நடத்தினார்.

இந்த பேச்சுவார்த்தையின் போது முதல்வர் பினராயி விஜயனின் அப்போதைய முதன்மை செயலாளர் சிவசங்கர், செயலாளர் நளினி நெட்டோ ஆகியோரும் உடன் இருந்தனர். ஆனால் சார்ஜா மன்னருடைய மனைவியின் தலையீடு காரணமாக இந்த திட்டம் நிறைவேறவில்லை.சார்ஜா மன்னரின் மனைவிக்கு, பினராயி விஜயனின் மனைவி வைரம் மற்றும் விலை உயர்ந்த பொருட்களை பரிசாக கொடுக்க முயற்சி செய்தார். ஆனால் அவர் அதை வாங்கவில்லை. இவ்வாறு சொப்னா தனது பிரமாண வாக்குமூலத்தில் குறிப்பிட்டு உள்ளதாக கூறப்படுகிறது.

Related Stories: