×

காங்கிரஸ் போராட்டம் நடத்தி வரும் நிலையில் முதல்வர் கெலாட்டின் சகோதரர் வீட்டில் ரெய்டு: ராஜஸ்தானில் சிபிஐ அதிரடி

ஜோத்பூர்: காங்கிரஸ் கட்சியினர் நாடு முழுவதும் போராட்டங்களை நடத்தி வரும்நிலையில், ராஜஸ்தான் முதல்வரின் சகோதரர் வீட்டில் இன்று சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். காங்கிரஸ் மூத்த தலைவரும், ராஜஸ்தான் முதல்வருமான அசோக் கெலாட்டின்  சகோதரர் அக்ராசெய்ன் கெலாட்டுக்குச் சொந்தமான இந்தியன் பொட்டாஷ் லிமிடெட்  நிறுவனம் ஏற்றுமதிக்குத் தடை விதிக்கப்பட்டுள்ள எம்ஓபி உரத்தை ஏற்றுமதி  செய்வதில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

ஏற்றுமதிக்குத் தடை விதிக்கப்பட்டுள்ள  இந்த எம்ஓபி உரத்தை ஐபிஎல் நிறுவனம் இறக்குமதி செய்து, அதை விவசாயிகளுக்கு  மானிய விலையில் விநியோகம் செய்ததாக புகார் உள்ளது. கடந்த 2007 முதல் 2009  வரை அக்ராசெய்ன் கெலாட்தான் ஐபிஎல் நிறுவனத்தின் அங்கீகரிக்கப்பட்ட டீலர்.  அவரது நிறுவனம் எம்ஓபி உரத்தை மானிய விலைக்கு வாங்கி, அதை விவசாயிகளுக்கு  விநியோகிப்பதற்குப் பதிலாக மற்ற நிறுவனங்களுக்கு விற்பனை செய்ததாகவும்,  மலேசியா மற்றும் சிங்கப்பூருக்கு சட்டவிரோதமாக ஏற்றுமதி செய்ததாகவும்  புகார்கள் எழுந்தன.

அதனால் முதல்வர் அசோக் கெலாட்டின் சகோதரர் அக்ராசெய்ன் கெலாட் இல்லம் உள்பட 12 இடங்களில் அமலாக்கத் துறை ரெய்டு நடத்தியது. இதேவிவகாரம் தொடர்பாக சிபிஐ-யும் வழக்குப்பதிவு செய்தது. அதன் அடிப்படையில் இன்று காலை ஜோத்பூரில் உள்ள முதல்வர் அசோக் கெலாட்டின் சகோதரர் அக்ராசெய்ன் கெலாட்டின் வீட்டில் சிபிஐ சோதனை நடத்தியது. அப்போது முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி ஆகியோருக்கு எதிராக அமலாக்க துறை நடவடிக்கை எடுத்ததற்கு, காங்கிரஸ் கட்சி நாடு தழுவிய போராட்டங்களை நடத்தி வரும் நிலையில், தற்போது சிபிஐ சோதனை நடத்தி வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Tags : CBI ,Chief Minister ,Gelat ,Congress , Congress struggle., Chief Minister Golat's brother, Raid, CBI in Rajasthan
× RELATED மாஜி துணை முதல்வர் ஜாமீன் கோரிய மனு...