×

மேல்மருவத்தூர் அருகே பயங்கரம் விவசாயி சரமாரி வெட்டி கொலை: மர்ம கும்பலுக்கு போலீஸ் வலை

மதுராந்தகம்: மேல்மருவத்தூர் அருகே நேற்றிரவு விவசாயி சரமாரி வெட்டி கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக மர்ம கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருவத்தூர் அடுத்த ராமாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் கன்னியப்பன் (67). விவசாயி. இவருக்கு மனைவி, 3 மகள், ஒரு மகன் உள்ளனர். அனைவருக்கும் திருமணமாகி விட்டது. தனித்தனியாக வசிக்கின்றனர். கன்னியப்பன், தனது மனைவியுடன் தனியாக வசித்து வந்தார்.

இந்நிலையில், தனது நிலத்தில் சாமந்தி பயிரிட்டிருந்தார் கன்னியப்பன். தற்போது முகூர்த்த காலம் என்பதால் பூக்கள் அதிக விலைக்கு விற்கப்படுகிறது. அதனால், நிலத்தில் பூத்த சாமந்தி பூக்களை பறித்து, வழக்கம்போல சோத்துப்பாக்கத்தில் உள்ள மொத்த வியாபாரியிடம் கொடுக்க நேற்று மாலை சென்றார் கன்னியப்பன். அங்கு வியாபாரியிடம் பூக்களை கொடுத்து விட்டு பைக்கில் இரவு வீட்டுக்கு திரும்பி கொண்டிருந்தார்.

ராமாபுரம் சந்தை பகுதி அருகே வந்தபோது, திடீரென ஒரு மர்ம கும்பல் அவரை வழிமறித்துள்ளது. மறைத்து வைத்திருந்த ஆயுதங்களால், கன்னியப்பனை சரமாரியாக வெட்டியது. இதில் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே கன்னியப்பன் துடிதுடித்து இறந்தார். இதற்கிடையில், ‘சோத்துப்பாக்கத்துக்கு சென்ற கன்னியப்பன் வீடு திரும்பவில்லையே’ என்று அவரது மனைவி மற்றும் உறவினர்கள் தேட ஆரம்பித்தனர். இரவு முழுவதும் தேடியும் எந்த தகவலும் இல்லை.

இன்று காலையில் மீண்டும் தேடியபோதுதான், அவர் கொலை செய்யப்பட்ட விவரம் தெரிந்தது. மனைவி மற்றும் உறவினர்கள் விரைந்து சென்று உடலை பார்த்து கதறி அழுதனர்.தகவல் அறிந்து மேல்மருவத்தூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் வழக்கு பதிந்து, கன்னியப்பனை கொலை செய்தது யார், எதற்காக கொலை செய்தார்கள் என பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர்.


Tags : Mellmaruvathur , Melmaruvathur, farmer hacked to death, police web
× RELATED மேல்மருவத்தூர் அடுத்த...