×

திருப்போரூர் சிதம்பர சுவாமிகள் மடம் குளத்தில் கழிவுநீர் கலப்பு: பக்தர்கள் வேதனை

திருப்போரூர்: திருப்போரூர் சிதம்பர சுவாமிகள் மடம் குளத்தில் கழிவுநீர் கலப்பதை தடுக்கவேண்டும் என பக்தர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். திருப்போரூர் கந்தசுவாமி கோயில் கடந்த 390 ஆண்டுக்கு முன் சிதம்பர சுவாமிகள் என்பவரால் உருவாக்கப்பட்டது. சிதம்பர சுவாமிகள் கண்ணகப்பட்டு என்ற இடத்தில் மடம் ஒன்றை உருவாக்கி அதில் தங்கியிருந்தபடி பூஜைகளை நடத்தி வந்தார். பின்னர் அவர் சமாதி அடைந்ததையடுத்து சிதம்பர சுவாமிகள் மடவளாகத்திலேயே அவரை தொடர்ந்து வந்த ஆதீனங்களின் உடல்கள் புதைக்கப்பட்டு வழிபாடு நடந்து வருகிறது.

ஆண்டுதோறும் சிதம்பரசுவாமிகள் குருபூஜை மற்றும் மாதா மாதம் பௌர்ணமி வழிபாடு போன்றவை சிதம்பர சுவாமிகள் பக்தர்களால் நடத்தப்பட்டு வருகிறது. இந்த மடத்தையொட்டி 200 ஆண்டுக்கு முன்பு திருக்குளம் உருவாக்கப்பட்டு, இந்த குளத்தில் இருந்து புனிதநீர் மடத்திற்கு எடுத்து வரப்பட்டு வழிபாடு நடத்தப்பட்டது. காலப்போக்கில் குளத்தை யாரும் பராமரிக்காததால் குளக்கரை படிகளாக இருந்த கருங்கற்கள் திருட்டு போயின. மக்கள் தொகை பெருக்கத்தால் அப்பகுதியில் ஏராளமான வீடுகள் உருவானது. இவ்வாறு கட்டப்பட்ட வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் மடத்து குளத்திற்குள் செல்லும் வகையில் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு கால்வாய் அமைக்கப்பட்டது.

இதனால் குளத்தின் நீர்மாசடைந்து சாக்கடையாக மாறிவிட்டது. குளத்தை பராமரிக்கவேண்டிய கந்தசுவாமி கோயில் நிர்வாகம் கண்டுகொள்ளவில்லை. குளத்தில் கழிவுநீர் கலந்ததால் இப்பகுதியில் கொசு உற்பத்தியாகி குழந்தைகளுக்கு சளி, காய்ச்சல், தோல் நோய் ஏற்படுவதாக இப்பகுதி மக்கள் புகார் கூறுகின்றனர். இதையடுத்து திருப்போரூர் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் குளத்திற்குள் விடப்படும் கழிவுநீரை வேறுஇடத்துக்கு மாற்றும் வகையில் மாற்றுக்கால்வாய் திட்டம் ஒன்றை உருவாக்கி மன்றத்தின் ஒப்புதல் பெறப்பட்டு பணிகளுக்கான டெண்டர் விடப்பட்டது. ஆனால் இன்னும் பணி தொடங்காததால் குளம் மேலும் மாசடைந்து வருகிறது. எனவே, கால்வாய் பணிகளை விரைந்து முடித்து மாசடைந்த குளத்தை தூர்வாரி சீரமைக்க வேண்டும். குளத்தின் ஒரு பக்கத்தில் உள்ள கான்கிரீட் கட்டுமானத்தை அகற்றி பழைய முறைப்படி கருங்கல் படிக்கட்டுகள் அமைக்கவேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Thirupporur Chidambara Swavamis Monastery Pond , Chidambaram Swamy Madam Pond, Sewage Mixed, Devotees tormented
× RELATED 7 ராமேஸ்வரம் மீனவர்கள் நிபந்தனையுடன் விடுதலை