இலங்கையில் இருந்து இரண்டு குடும்பத்தை சேர்ந்த 7 பேர் தனுஷ்கோடி வருகை: போலீசார் விசாரணை

ராமேஸ்வரம்: இலங்கையை சேர்ந்த இரண்டு குடும்பத்தினர் 7 பேர் இன்று அதிகாலை தனுஷ்கோடி அரிச்சல்முனை கடற்கரைக்கு படகில் வந்து சேர்ந்தனர். இவர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இலங்கையில் நிலவி வரும் பொருளாதாரா சீரழிவினால் அத்தியாவசிய பொருட்களின் விலை பன்மடங்கு உயர்ந்துள்ளது. வேலைவாய்ப்பு மற்றும் வருவாயின்றி மக்கள் பல்வேறு கஷ்டங்களை அனுபவித்து வருகின்றனர். இதனால் இலங்கை தமிழர்கள் இலங்கை கடற்படை, போலீசாரின் கண்காணிப்பையும் மீறி அவ்வப்போது இலங்கையிலிருந்து கடல் வழியாக தமிழகத்திற்கு அகதிகளாக வருகின்றனர்.

இலங்கை வவுனியா திருநாவகுளம் பகுதியை சேர்ந்த தஸ்நேவிஸ் (40), இவரது மனைவி ரஜினி (39), இவர்களது குழந்தைகள் ஜோஸ்வா (12), ஏஞ்சல் (11), அன்சிகா (5), இலங்கை திரிகோணமலை நிலவளி பகுதியை சேர்ந்த மேத்யா (40), இவரது மகன் சந்தனு (7) ஆகியோர் நேற்று இரவில் தலைமன்னாரில் இருந்து படகில் புறப்பட்டு தனுஷ்கோடி அரிச்சல்முனை கடற்கரையில் இன்று அதிகாலை வந்திறங்கினர். இவர்களை இறக்கிவிட்ட படகு திரும்ப சென்று விட்டது.

இதுபற்றி தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற ராமேஸ்வரம் மரைன் போலீசார் இலங்கை தமிழர்கள் 7 பேரையும் விசாரணைக்கு மண்டபம் மரைன் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். முதல்கட்ட விசாரணையில், வருவாய் இல்லாமல் மிகவும் கஷ்டப்பட்டு வந்ததால் தமிழகத்திற்கு அகதிகளாக வந்ததாக தெரிவித்தனர். தங்களிடம் இருந்த தங்க நகைகளை படகுக்கு கட்டணமாக கொடுத்து படகில் தனுஷ்கோடி வந்ததாக தெரிவித்த இவர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர். விசாரணைக்குப்பின் இவர்கள் மண்டபம் முகாமிற்கு அனுப்பி வைக்கப்பட்டு அகதிகளாக பதிவு செய்யப்படவுள்ளனர்.

Related Stories: