×

நான் நகரம்டா... நான் மாநிலம்டா.... பாஜ நிர்வாகிகள் நடுரோட்டில் மோதல்: வீடியோ வைரலால் பரபரப்பு

அறந்தாங்கி: புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி வைரிவயலைச் சேர்ந்தவர் கவிதாஸ்ரீகாந்த். பாஜக மாநில மகளிரணி செயலாளராக இருந்த இவரை சமீபத்தில் அக்கட்சி மேலிடம் மாநில மகளிரணி பொதுச் செயலாளராக அறிவித்தது. இதைத் தொடர்ந்து கவிதாஸ்ரீகாந்த் தனக்கு பொறுப்பு வழங்கிய மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கு நன்றி தெரிவித்து அறந்தாங்கியில் 6 இடங்களில் பிளக்ஸ் பேனர் வைத்துள்ளார். இந்த பேனரில் கட்சியின் புதுக்கோட்டை மாவட்டச் செயலாளர் மற்றும் அறந்தாங்கி நகரத் தலைவர் படம் இடம் பெறவில்லை.

இதனால் ஆத்திரமடைந்த அறந்தாங்கி நகர பாஜக தலைவர் ரமேஷ் தனது ஆதரவாளர்களுடன் கவிதா வைத்திருந்த பிளக்ஸ் பேனர்களை அகற்றியுள்ளார். இந்த தகவலறிந்த கவிதா, அவரது கணவர் ஸ்ரீகாந்த் மற்றும் அவரது ஆதரவாளர்கள் அறந்தாங்கி கட்டுமாவடி முக்கம் பெட்ரோல் பங்க் அருகே வைத்திருந்த பிளக்ஸ் பேனரை ரமேஷ் நேற்றிரவு அகற்றியபோது, அவரிடம் ஏன் பிளக்ஸ் பேனரை அகற்றுகிறீர்கள் என தட்டி கேட்டனர். பேனரில் மாவட்ட செயலாளர் மற்றும் நகரத் தலைவர் படம் இல்லை.

அதனால் தான் அகற்றுகிறோம் என ரமேஷ் கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ஸ்ரீகாந்த் பைக் சாவியால் ரமேஷின் முகத்தில் ஓங்கி குத்தியுள்ளார். இதில் காயமடைந்த ரமேஷ் அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் சேர்ந்தார். இந்நிலையில் பாஜகவினரிடையே நடந்த இந்த மோதல் வீடியோ புதுக்கோட்டை, அறந்தாங்கி பகுதியில் சமூக வலைதளத்தில் வைரலானது.

அதில் இரு தரப்பினரும் கடுமையாக விமர்சித்து பேசிக்கொண்டது வருமாறு:
ஸ்ரீகாந்த்: எதற்கு எங்க பேனரை எடுத்த? உனக்கு அறிவு இருக்கா?
ரமேஷ்: உனக்கு அறிவு இருக்காடா..
ஸ்ரீகாந்த்: யாருடா நீ.
ரமேஷ்: முதல்ல நீ யாருடா... நான் நகரம்டா...
ஸ்ரீகாந்த்: நான் மாநிலம்டா? எனப் பேசிக்கொண்டு இருக்கும் போது கைகலப்பு ஏற்பட்டது. உடனே அருகில் இருந்தவர்கள் அவர்களை சமாதானம் செய்கிறார்கள்.
கவிதா: நாங்க பணம் செலவு பண்ணி வைக்கும்போது எங்க விருப்பப்படிதான் போர்டு வைக்க முடியும்.
ரமேஷ்: ஆமாம் நீங்க பணத்தை கொடுத்து தானே ஆட்களை சேர்த்துக்கிறீங்க.
கவிதா: யாரு நாங்களா? நீங்க தான் பணத்தை செலவு பண்ணி ஆட்களை கைல வச்சுறுக்கீங்க.
மீண்டும் கைகலப்பு வரும் நிலையில் அங்கு இருந்தவர்கள் சமாதானம் செய்ய இரு பிரிவினரும் கலைந்து செல்லும் வீடியோ வைரல் கட்சியினரிடையே பரபரப்பை ஏற்படுத்தியது.

இச்சம்பவம் குறித்து அறந்தாங்கி போலீசில் ரமேஷ் கொடுத்த புகாரின் பேரில், அவரைத் தாக்கியதாகஸ்ரீகாந்த், இளங்கோவன் ஆகியோர் மீதும், இதேபோல் ரமேஷ் தகாத வார்த்தைகளால் பேசி தாக்கியதாக ஸ்ரீகாந்த் கொடுத்த புகாரின் பேரில் ரமேஷ் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags : Baja ,Nadurote , I am from the city, I am from the state, BJP executives, clash in the middle of the road, video viral
× RELATED உதவியாளர்களிடம் ரூ.4 கோடி பறிமுதல்...