×

நாடு முழுவதும் இளைஞர்கள் போராட்டம் எதிரொலி; ‘அக்னிபாத்’ திட்டத்தில் வயது வரம்பு 23 ஆக உயர்வு.! ஒன்றிய அரசு திடீர் பல்டி

புதுடெல்லி: ‘அக்னிபாத்’ திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் இளைஞர்கள் போராட்டம் நடத்தி வரும் நிலையில், இத்திட்டத்திற்கான வயது வரம்பு 21 என்பதில் இருந்து 23 ஆக உயர்த்தி ஒன்றிய அரசு நேற்றிரவு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்திய ராணுவத்தின் முப்படைகளிலும், குறுகிய மற்றும் நிரந்தர அடிப்படையில் வீரர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள். குறுகியகால அடிப்படையில் தேர்வு செய்யப்படும் வீரர்கள் 10 ஆண்டுகளும், நிரந்தர அடிப்படையில் தேர்வு செய்யப்படுவோர் ஓய்வுபெறும் வயது வரையிலும் பணிபுரிய முடியும். குறுகியகால அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டவர்கள் விருப்பப்பட்டால் தனது பணிக்கால முடிவில் 4 ஆண்டுகள் பணி நீட்டிப்பு பெற்றுக் கொள்ளலாம். இந்திய ராணுவத்தில் தற்போது வரை இந்த நடைமுறைதான் பின்பற்றப்பட்டு வருகிறது.

இந்நிலையில், ஒன்றிய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கடந்த 14ம் தேதி ராணுவத்தில் ஆள் சேர்ப்பதற்கான புதிய திட்டமான `அக்னிபாத்’ என்னும் திட்டத்தை அறிமுகப்படுத்தினார். அரசின் இந்தத் திட்டத்தை ஆதரித்தும் விமர்சித்தும் பலர் கருத்து தெரிவித்துவருகின்றனர். இந்த திட்டத்திற்கு எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளன.  இந்த திட்டம் காரணமாக ராணுவத்தில் ஒழுங்கு கெட்டுவிடும். அதேபோல் 4  வருடத்திற்கு பின் வெளியே வரும் அக்னி வீரர்கள் வேலையின்றி தவிப்பார்கள்.  இவர்களை தீவிரவாத இயக்கங்கள் அணுக வாய்ப்பு உள்ளது. பாதுகாப்பு  ரீதியாகவும், வேலைவாய்ப்பு ரீதியாகவும் பல சிக்கல்களை ஏற்படுத்தும் என்று  காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையான விமர்சனங்களை வைத்து உள்ளன.  அதோடு இந்த திட்டத்திற்கு எதிராக பீகார், உத்தரபிரதேசம், மத்திய பிரதேசம்  உள்ளிட்ட 8 மாநிலங்களில் இளைஞர்கள் போராட்டங்கள் நடத்தினர்.

பீகாரின் சாப்ரா ரயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்த பயணிகள் ரயிலுக்கு இளைஞர்கள் சிலர் தீ வைத்தனர். மேலும் பல இடங்களில் ரயில் தண்டவாளங்களிலும் நெடுஞ்சாலைகளிலும் டயர் உள்ளிட்டவற்றை எரித்து போக்குவரத்தை ஸ்தம்பிக்க வைத்தனர். பல இடங்களில் ரயில் பாதைகளை மறித்த இளைஞர்கள் உடற்பயிற்சிகளை செய்து தங்களது எதிர்ப்புகளை பதிவு செய்தனர். நவாடா என்ற இடத்தில் பாஜக அலுவலகத்தை இளைஞர்கள் அடித்து நொறுக்கி தீ வைக்கவும் செய்தனர். இதனையடுத்து வன்முறையாளர்களை கட்டுப்படுத்த தடியடி நடத்துவது, கண்ணீர் புகை குண்டுகளை வீசுவது போன்றவற்றை காவல்துறையினர் மேற்கொண்டனர். தொடர்ந்து பீகாரின் பல இடங்களில் பதற்றமான நிலை நீடித்து வருகின்றது.

இதேபோல ராஜஸ்தான், உத்தரபிரதேசம், ஹரியானா, ஜம்மு - காஷ்மீர், உத்தரகாண்ட் உள்ளிட்ட பல மாநிலங்களிலும் போராட்டங்களும் வன்முறையும் நடந்து வருகின்றன. இந்த திட்டத்திற்கான வயது வரம்பை  உயர்த்த வேண்டும். 4 வருடங்களுக்கு பிறகு வேலைவாய்ப்பை உறுதி செய்ய  வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வைத்து இளைஞர்கள் போராட்டம் செய்து வருகின்றனர். இந்நிலையில்,  அக்னி பாத் திட்டத்தின் கீழ் ராணுவத்தில்  சேர்க்கப்படுவதற்கான வயது வரம்பு  21 என்பதில் இருந்து 23 வயதாக  உயர்த்தப்பட்டுள்ளது. ஆனால் 2022ம் ஆண்டு  நியமனத்திற்கு மட்டுமே இந்த வயது  வரம்பு பொருந்தும் என்று நேற்றிரவு ஒன்றிய  அரசு அறிவிப்பு  வெளியிட்டுள்ளது. தொடர் போராட்டங்களுக்கு மத்தியில் இந்த  வயது வரம்பு  உயர்த்தப்பட்டுள்ளது. இருந்தாலும், பணி பாதுகாப்பு குறித்த  அச்சம்  இளைஞர்கள் மத்தியில் நிலவுவதால், இன்றும் ஆங்காங்கே போராட்டங்கள்  தொடர்ந்து நடைபெற்றன.

அதனால், ‘அக்னிபாத்’ சட்டத்தில் மேலும் மாற்றங்கள்   செய்யப்படுமா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. ஆனால், மூன்றாவது நாளான இன்று காலை பீகாரின் சமஸ்திபூரில் நின்றிருந்த ஜம்மு தாவி-கவுஹாத்தி எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு மர்ம நபர்கள் தீ  வைத்தனர். இதில் ரயிலின் 2 பெட்டிகள் எரிந்து நாசமானது. ஹாஜிபூர்-பரவுனி  ரயில்வே பிரிவின் மொகியுதீன்நகர் ரயில் நிலையத்தை இளைஞர்கள் கல்வீசி  தாக்கினர். இதனால் போலீசார் அங்கு தடியடி நடத்தினர். ஆரா மற்றும் பக்சர்  ஆகிய இரு இடங்களில் இன்று காலை முதல் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதற்கிடையில், பீகாரின் முக்கிய எதிர்க்கட்சியான ராஷ்ட்ரிய ஜனதா தளம் வெளியிட்ட அறிவிப்பில், ‘அக்னிபாத் திட்டத்தை உருவாக்கியவர்களுக்கு, அக்னிவீர்களில் இவ்வளவு நெருப்பு இருக்கிறது என்று கூட தெரிந்திருக்காது’ என்று தெரிவித்து, வன்முறை காட்சிகளின் புகைப்படங்களை வெளியிட்டுள்ளது.

Tags : United States , Echoes of youth struggle across the country; Age limit raised to 23 in 'Agnipath' project! The United States suddenly reversed
× RELATED இஸ்ரேல் மீது ட்ரோன், ஏவுகணை தாக்குதலை தொடங்கியது ஈரான்