நெடுஞ்சாலைத்துறை-மாநகராட்சி இணைந்து நடவடிக்கை: மேலப்பாளையத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

நெல்லை:  நெல்லை வண்ணார்பேட்டையை தொடர்ந்து மேலப்பாளையத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. நெல்லை  மாநகர பகுதியில் ஆக்கிரமிப்புகள் அதிகரித்து வரும் நிலையில் மாநகராட்சி மற்றும் நெடுஞ்சாலை துறையினர் இணைந்து பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த சில தினங்களாக வண்ணார்பேட்டை ரவுண்டானா மற்றும் சர்வீஸ் சாலைகளில் ஆக்கிரமிப்புகளை அகற்றினர். மேலப்பாளையம் மண்டலத்தில் அம்பை ரோடு, ஆசாத் ரோடு, நேதாஜி சாலை ஆகிய பகுதிகளில் ஆக்கிரமிப்புகளை அகற்ற கடந்த 4 நாட்களுக்கு முன் அறிவிப்பு செய்யப்பட்டது.

மேலும் ஆக்கிரமிப்பு அகற்றுமாறு நேற்று முன்தினம் ஆட்டோ மூலமும் பிரசாரம் செய்தனர். இதனைத்தொடர்ந்து நேற்றுமுன்தினம் நள்ளிரவில் ஒருசிலர் தங்களாகவே  கடை முன் இருந்த ஆக்கிரமிப்புகளை அகற்றினர். இந்நிலையில்  நேற்று காலை 8 மணி முதல் நெடுஞ்சாலை துறை உதவி கோட்ட பொறியாளர் சேகர், உதவி பொறியாளர் சண்முகநாதன், மாநகராட்சி மண்டல உதவி ஆணையர் ஐயப்பன்,  மாநகராட்சி செயற்பொறியாளர் நாராயணன், உதவி செயற்பொறியாளர் ராமசாமி, உதவி  பொறியாளர் நாகராஜன், இளநிலை பொறியாளர் முகமதுஅபூபக்கர், சுகாதார அலுவலர் சாகுல் மற்றும் பணியாளர்கள் ஆக்கிரமிப்பு அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும் போது பிற கடைக்காரர்கள் தாங்களது ஆக்கிரமிப்பு பகுதி பொருட்களை தாங்களாகவே அகற்றி எடுத்து சென்றனர். நண்பகல் வரை 200க்கும்  மேற்பட்ட ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. இந்த பணியை முன்னிட்டு பலத்த  போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. இப்பகுதிகளில் பரபரப்பு நிலவியது.  விடுபட்ட பகுதிகளில் மீண்டும் 20ம் தேதி (திங்கட்கிழமை) முதல் ஆக்கிரமிப்புகள் மீண்டும் அகற்றப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories: