×

தண்டராம்பட்டு அடுத்த தொண்டமானூரில் பாறையில் 5 ஆயிரம் ஆண்டுகள் பழமையான மான் உருவம் கண்டெடுப்பு

திருவண்ணாமலை: தண்டராம்பட்டு அடுத்த தொண்டமானூரில் 5 ஆயிரம் ஆண்டுகள் பழமையான மான் உருவம் மற்றும் பாறை கீறல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அடுத்த தொண்டமானூர் கிராமத்தில் மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவத்தின் செயலாளர் பாலமுருகன் தலைமையில் பழனிசாமி, மதன்மோகன் உள்ளிட்ட குழுவினர் நடத்திய ஆய்வில் 5 ஆயிரம் ஆண்டுகள் பழமையான பாறை கீறல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தொண்டமானூர் வழியாக பாயும் தென்பெண்ணை ஆற்றையொட்டி பலகுன்றுகள் உள்ளன. இக்குன்றுகளில் உள்ள குகைத்தளங்களை இப்பகுதிமக்கள் பொடவு என அழைக்கின்றனர்.

அதில், வரலாற்றுக்கு முற்பட்ட கால மனிதர்களால் உருவாக்கப்பட்ட பாறை கீறல்கள் இடம் பெற்றுள்ளன. பாறை கீறல்களின் அமைப்பு மற்றும் வடிவம் குறித்து தொல்லியல் ஆய்வாளர் காந்திராஜன் நேற்று கூறியிருப்பதாவது: வவ்வால் பொடவு என்ற இடத்தில் உள்ள பாறையின் தென்புற சரிவில் 10 அடி அகலமும், 10 அடி நீளமும் உள்ள பாறையில் பல கோட்டுருவங்கள் காணப்படுகின்றன. இந்த கோட்டுருவங்கள் பல நீண்ட கோடுகளும், வளைவுகளும் காணப்படுகின்றன. அதில், மனித உருவம் ஒன்று கை வீசி கையில் ஆயுதங்கள் ஏதுமின்றி நடந்து வருவது போல காட்டப்பட்டுள்ளது.இந்த உருவத்தின் இடது கையருகே நீண்ட மரக்குச்சி, தடி போல உள்ளது.

அதன் அடிப்பக்கத்தில் அம்பு போன்ற முனை காட்டப்பட்டுள்ளது. கால்கள் அருகே 2 ஆழமான குழிகள் உள்ளன. மேல்புறம் மனித உருவம் ஒன்று இரண்டு முக்கோணங்களால் உருவாக்கப்பட்டுள்ளது. அதன் அருகே, சில வரைவுகள் காணப்படுகின்றது. மனித உருவத்திற்கு அருகே நீண்ட கோடுகளும் ஆங்காங்கே குறுக்கு கோடுகளும் காணப்படுகின்றது. இக்கோடுகள் ஆழமாகவும் நேர்த்தியான வடிவமைப்பும் கொண்டதாக உள்ளது. மற்றொரு பாறையில் கோடுகள் நேராகவும் குறுக்கு கோடுகளாகவும் தொடர்ச்சியாக நெருக்கமாக செதுக்கப்பட்டுள்ளது. மேலும் கொம்புகள், வால் ஆகியவை கொண்ட மான் அல்லது மாடு போன்ற உருவம் ஒன்று தெளிவாக அமைந்துள்ளது.

இங்குள்ள கற்செதுக்குகள் அல்லது பாறை கீறல்கள் தமிழகத்தில் ஏற்கனவே கண்டறியப்பட்ட விழுப்புரம் மாவட்டம் பெருமுக்கல், நீலகிரி மாவட்டம் ஏற்பெட்டு மற்றும் கேரளாவில் உள்ள எடக்கல் கற்செதுக்குகளுக்கு நிகரான கல்செதுக்கு ஓவியங்கள் காணப்படுகின்றது. இந்த கல் செதுக்கு ஓவியங்கள் புதிய கற்காலத்தின் இறுதி பகுதியில் செதுக்கி இருக்க வாய்ப்பு உள்ளது. எனவே, இவை 3 ஆயிரம் முதல் 5 ஆயிரம் ஆண்டுகள் பழமையானதாக இருக்கலாம். இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.

Tags : Thondamanur ,Thandarambattu , A 5,000 year old deer figure was found on a rock in Thondamanur next to Thandarambattu
× RELATED ஏரியில் மீன் குஞ்சுகளை விட அனுமதிக்க...