ஜலகாம்பாறை நீர்வீழ்ச்சியில் ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீர்: குளிக்க தடை விதித்த வனத்துறை

திருப்பத்தூர்: திருப்பத்தூர் பகுதிகளில் பெய்த கனமழையால், ஜலகாம்பாறை நீர்வீழ்ச்சியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. நீர்வீழ்ச்சியில் குளிக்க வனத்துறையினர் தடை விதித்துள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் கடந்த மாதம் கத்திரி வெயில் பொதுமக்களை வாட்டி வதைத்தது. இதனால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வருவதற்கு அச்சப்பட்டு பகல் நேரங்களில் வீட்டிலேயே முடங்கினர். இந்நிலையில், வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பலத்த மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்தது. அதன்படி, திருப்பத்தூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு பரவலாக கனமழை பெய்தது.

இதனால், ஏரி, குளம் மற்றும் கிளை ஆறுகள் உள்ளிட்ட நீர்நிலைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்நிலையில், ஏலகிரி மலை அத்தனாவூர் பகுதியில் பெய்த கனமழை காரணமாக, அங்குள்ள ஏரியானது நிரம்பி ஜலகாம்பாறை நீர்வீழ்ச்சியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது. வழக்கத்தைவிட நேற்று நீர்வீழ்ச்சியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பொதுமக்கள் யாரும் நீர்வீழ்ச்சியில் குளிக்கக்கூடாது என்று வனத்துறையினர் தடைவிதித்துள்ளனர்.

Related Stories: