உடுமலை சுற்றுவட்டாரத்தில் தினமும் 300 லோடு மண் கடத்தல் தொடர் கனிமவள கொள்ளை

*குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் குற்றச்சாட்டு

உடுமலை : உடுமலையில் தொடர்ந்து கனிமவளக் கொள்ளை நடைபெற்று வருவதாகவும் நாள் ஒன்றுக்கு 300 லோடு செம்மண், கிராவல் மண் கடத்தப்பட்டு வருகிறது என குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் குற்றம் சாட்டினர். உடுமலை அரசு கலைக்கல்லூரி வளாகத்தில் நேற்று விவசாயிகள் குறைதீர்க்கும் நடைபெற்றது. கூட்டத்தில் ஆர்டிஓ ஜஸ்வந்த் கண்ணன் பேசுகையில், ‘‘கூட்டத்திற்கான நாள் மற்றும் நடைபெறும் இடம் குறித்து அறிவிப்பதில் ஏற்பட்ட கால தாமத்தால் கூட்டம் குறித்து முறையாக முன்கூட்டியே தெரிவிக்க முடியவில்லை. இனி முன்கூட்டியே தகவல் தெரிவிக்கப்படுவதோடு, விவசாயிகள் அளிக்கும் மனுக்களுக்கு உரிய பதில் அளிக்க நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்.

குறைத்தீர் கூட்டத்தில் விவசாயி ஜல்லிபட்டி கோபால் பேசியதாவது: தமிழகம் முழுவதும் வண்டல் மண் எடுக்க அரசு அனுமதி வழங்கிய நிலையில், திருமூர்த்தி அணையில் இருந்து வண்டல் மண் எடுக்க விவசாயிகளுக்கு அனுமதி வழங்கவில்லை. எனவே பருவமழை துவங்கும் முன்பாக அணையில் இருந்து வண்டல் மண் அள்ள அனுமதி வழங்க அரசு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

காஞ்சித்துரை (பொதுப்பணித்துறை): தற்போது அனுமதி வழங்கப்பட்டுள்ள குளம், குட்டைகளில்தான் விவசாயிகள் மண் எடுக்க வேண்டும். திருமூர்த்தி ஈணையில் வண்டல் மண் எடுக்க கலெக்டர் அனுமதி பெற வேண்டும். பாலதண்டபாணி (விவசாயி): சின்னவீரம்பட்டி, பெரியகோட்டை பகுதிகளில் மர்ம விலங்கு கடித்ததில் 50க்கும் மேற்பட்ட ஆடுகள் பலியாகி உள்ளது. கால்நடை வளர்க்கும் விவசாயிகளின் அச்சத்தை போக்கி, வாழ்வாதாரத்தை காக்கும் வகையில் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கடும்.

சௌந்தரராஜன் (விவசாயி): திருமூர்த்தி அணைக்கு வரும் நீர் விபரம், பருவமழை உள்ளிட்ட சூழ்நிலைகளை கலெக்டருக்கு அதிகாரிகள் விளக்கி , வண்டல்மண் எடுக்க உடனடியாக அனுமதி பெற நடவடிக்கை எடுக்க வேண்டும். உடுமலை சுற்று வட்டாரப்பகுதியில் கனிம வளம் கொள்ளையடிக்கப்பட்டு வருகிறது. நாள் தோறும் இங்கு சுமார் 300 லோடு செம்மண் மற்றும் கிராவல்மண் கடத்தப்பட்டு வருகிறது. இதனை தடுக்க கோட்டாச்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மதுசூதனன் (விவசாயி): உடுமலை திருமூர்த்திமலைப் பகுதியில் தமிழக அரசு வழங்கியுள்ள இடத்தில் அமைந்துள்ள தென்னை வளர்ச்சி வாரிய புதிய கட்டத்தில் ஹிந்தி மொழியில் பெயர் பலகை அமைக்கப்பட்டுள்ளது. அங்கு தமிழில் பெயர் பலகை அமைக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். 7 குள பாசனம் பழையூரில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டுள்ளன. அப்பகுதியில் குளத்தை ஆழப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

போன் மூலம் விவசாயிகளுக்கு அழைப்பு

குறைதீர் கூட்டம் குறித்து விவசாயிகளுக்கு முன்கூட்டியே தகவல் அளிக்கவில்லை. 10 மணிக்கு துவங்குவதாக அறிவிக்கப்பட்ட கூட்டம் விவசாயிகள் யாரும் வராத நிலையில் 11.30 மணிக்கு மேல் துவங்கியது. அதிகாரிகள் விவசாயிகள் ஒவ்வொருவருக்கும் போன் மூலம் அழைப்பு விடுத்து, விவசாயிகள் வந்த பின்பே கூட்டத்தை தாமதமாக துவங்கினர்.  

கூட்டத்தில் பேசிய விவசாயிகள் தங்களது மனுக்களுக்கு பதில் அளிக்கக்கூடிய துறை அதிகாரிகள் பங்கேற்கும் வகையில், விவசாயிகளின் குறை தீர்க்கும் கூட்டம் குறித்து ஒரு வாரத்திற்கு முன்பே விவசாயிகளுக்கு தகவல் தர வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

Related Stories: