×

விவசாயிகள் மகிழ்ச்சி வருசநாடுக்கு வந்தது வாரச்சந்தை

வருசநாடு : வருசநாடு கிராமத்தில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள் அமைந்துள்ளன. வருசநாடு கிராமத்தை சுற்றிலும் சிங்கராஜபுரம், முருக்கோடை, தும்மக்குண்டு, தர்ம ராஜபுரம், வைகைநகர் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளது. இந்த கிராமங்களில் விவசாயம் முதன்மை தொழிலாக நடைபெற்று வருகிறது.

இங்கு விளையும் பொருட்களை தேனி, சின்னமனூர், கம்பம், ஆண்டிபட்டி, மதுரை உள்ளிட்ட சந்தைகளுக்கு விவசாயிகள் அனுப்பி வருகின்றனர். விளைபொருட்களை நீண்ட தொலைவில் அமைந்துள்ள சந்தைகளுக்கு அனுப்பி வைப்பதால் பயண செலவு காரணமாக லாபம் பாதியாக குறைந்து விடுகிறது. எனவே விவசாயிகளின் நலன் கருதி வருசநாட்டில் புதிதாக வாரச்சந்தை அமைக்க வேண்டும் என நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்தனர்.

 இது குறித்து தினகரன் நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டிருந்தது. இதன் எதிரொலியாக கடந்த சில நாட்களுக்கு முன்பு வருசநாட்டில் புதிய வாரச்சந்தை அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டது. நேற்று முன்தினம் வாரசந்தை திறப்பு விழா நடைபெற்றது. இதனால் தினகரன் நாளிதழுக்கு பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர். வருசநாடு ஊராட்சி மன்ற தலைவர் மணிமுத்து, தலைமை தாங்கி சந்தையை தொடங்கி வைத்தார்.

இதில் விவசாய சங்க நிர்வாகி மலைராஜன், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் குபேந்திரன், சமூக ஆர்வலர்கள் அட்டாக்குமார், பாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தற்போது சந்தை துவங்கப்பட்டு உள்ளதால் வருசநாடு மற்றும் சுற்றியுள்ள கிராம விவசாயிகள் விளைபொருட்களை நேரடியாக சந்தைகளில் விற்பனை செய்து கொள்ள முடியும். இதனால் அதிக லாபம் கிடைக்க வாய்ப்புகள் உள்ளது என விவசாயிகள் தெரிவித்தனர்.

Tags : Varusanaadu, weekly Market
× RELATED தென் சென்னை அதிமுக மாவட்ட செயலாளர் வேலைக்கார பெண்ணிடம் சில்மிஷம்