இன்று 4வது டி20 வெற்றி முயற்சியில் இந்தியா: வெல்லும் முனைப்பில் தெ.ஆப்ரிக்கா

ராஜ்காட்: இந்தியா-தென் ஆப்ரிக்கா இடையிலான 4வது டி20 போட்டி  குஜராத் மாநிலம் ராஜ்காட்டில் இன்று நடக்கிறது. இந்தியா வந்துள்ள தெ.ஆப்ரிக்கா அணி 5 ஆட்டங்களை கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. முதல் 2 ஆட்டங்களை தெ.ஆப்ரிக்காவும், 3வது ஆட்டத்தை  இந்தியாவும் வென்றுள்ளன. அதனால் தொடரில் 2-1 என்ற கணக்கில் தெ.ஆப்ரிக்கா முன்னிலையில் உள்ளது. இன்று நடைபெறும் 4வது டி20 ஆட்டத்தில் வென்றால்தான் தொடர் தற்காலிகமாக சமமாகும். தொடர் தோல்வியை தள்ளிப் போட முடியும்.அதனால் ரிஷப் பண்ட் தலைமையிலான இந்திய அணி இன்று வெற்றிப் பெற கூடுதல் முயற்சி எடுக்கும். அதுவும் 3வது டி20 ஆட்டத்தில் கிடைத்த வெற்றி  கூடுதல் உற்சாகமாக இருக்கும். அதிலும் அந்தப் போட்டியில் சாஹல் , ஹர்ஷல் ஆகியோரின் பந்து வீச்சும் எடுபடலாம். புவேனேஸ்வர் போல் ஹர்திக், தினேஷ், ஸ்ரேயாஸ் என மற்ற வீரர்களும் தொடர்ந்து நன்றாக  விளையாடினால் தெ.ஆப்ரிக்காவுக்கு நெருக்கடி தர முடியும்.இந்த தொடரில் 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் இருக்கும் டெம்பா பவுமா தலைமையிலான தெ.ஆப்ரிக்கா  எஞ்சிய 2 ஆட்டங்களில் ஒன்றில் வென்றால் கூட தொடரை கைப்பற்றி விடும். ஆனால்  அதை கடைசி ஆட்டம் வரை தள்ளிப் போடாது.  மில்லர், கிளாஸ்ஸன், பவுமா, ரபாடா, டுசன் கூட்டணி இன்றைய ஆட்டத்திலேயே வேகம் காட்டி வென்று,  தொடரை கைப்பற்ற முயலும்.இந்தியாவை போன்று கடைசியாக விளையாடிய 3 தொடர்களில் தென் ஆப்ரிக்காவும் தோற்றதில்லை.  அதிலும்  தொடர்ந்து 12 டி20 வெற்றிகளை வென்ற இந்திய 13வது ஆட்டத்தில் தெ.ஆப்ரிக்காவிடம் தோற்றது. அதேபோல் தொடர்ந்து 9 டி20ஆட்டங்களில் வென்ற தென் ஆப்ரிக்கா 10வது ஆட்டத்தில் இந்தியாவிடம் தோற்றது.இப்படி தோல்வி கணக்கை அதிகரிக்காமல் இருக்க 2 அணிகளும் முயற்சிக்கும் என்பதால், இன்றைய  ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.

Related Stories: