×

கருணாகரச்சேரி, இரும்பேடு கிராமங்களில் குறைந்த மின் அழுத்தத்தால் மின்சாதன பொருட்கள் பழுது

ஸ்ரீ பெரும்புதூர்: ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியம் வெங்காடு ஊராட்சிக்கு உட்பட்ட கருணாகரச்சேரி, இரும்பேடு ஆகிய கிராமத்தில் 500க்கும் அதிகமான குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். தற்போது, இந்த இரண்டு கிராமங்களிலும் கடந்த ஒரு வருடமாக குறைந்த மின் அழுத்தம் காரணமாக, டி.வி. ஏ.சி. போன்ற மின்சாதன பொருட்கள் அடிக்கடி பழுதாகி வருகிறது. இதனால், பொதுமக்கள் கடும் சிரமம் அடைந்து வருகின்றனர். இதனால், கருணாகரச்சேரி, இரும்பேடு கிராமங்களில் தனித்தனியாக புதிய டிரான்ஸ்பார்மர் அமைக்க வேண்டும் என்று வெங்காடு ஊராட்சி மன்ற தலைவர் அன்னக்கிளி உலகநாதன், வார்டு உறுப்பினர்கள் மற்றும் பொது மக்கள் படப்பை துணை மின்நிலைய அலுவலகத்தில் கோரிக்கை மனு கொடுத்தனர். மேலும், புதிய டிரான்ஸ்பார்மர் அமைக்க டெபாசிட் தொகை கட்ட தயாராக இருப்பதாகவும் துணை மின்நிலைய அதிகாரிகளிடம் அவர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால், அதிகாரிகள் இதைக்கண்டு கொள்ளாமல் அலட்சியமாக இருந்தனர்.  இதனால், நாளுக்குநாள் இப்பகுதி மக்கள் கடும் சிரமம் அடைந்து வருகின்றனர்.

 இதுகுறித்து, அவர்கள் கூறியதாவது: ‘பெரும்புதூர் ஒன்றியம் வெங்காடு ஊராட்சிகளில் 3 ஆயிரத்திற்கும் அதிகமான குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த ஊராட்சிகளில் ஏராளமான தனியார் தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. இந்த தொழிற்சாலைகளில் பல்வேறு மாநிலங்களில் இருந்து மேற்கண்ட ஊராட்சியில் தங்கி வேலைக்கு சென்று வருகின்றனர். இதனால், இந்த ஊராட்சியில் நாளுக்குநாள் மக்கள் தொகை அதிகரித்து வருகிறது. இதனால், மின் பற்றாக்குறை நிலவி வருகிறது. தற்போது வீடுகளில் உள்ள மின் சாதன பொருட்கள் இயக்குவதில் சிரமம் அடைந்து வருகின்றனர். எனவே, வெங்காடு ஊராட்சி கருணாகரச்சேரி, இரும்பேடு பகுதியில் புதிய மின்சார டிரான்ஸ்பார்மர்கள் அமைக்க வேண்டும் என்று கோருவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

Tags : Karunakaracheri ,Irumbedu , Repair of low voltage electrical appliances in Karunakaracheri and Irumbedu villages
× RELATED கருணாகரச்சேரி ஊராட்சியில் கிராம சபை...