×

திருப்போரூர் பேரூராட்சியில் கிடப்பில் போடப்பட்ட தார்சாலை பணி : சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை

திருப்போரூர்: திருப்போரூர் பேரூராட்சியில் தார் சாலை அமைக்க ஜல்லி கற்கல் கொட்டப்பட்டநிலையில், கடந்த 2 மாதங்களாக பணி கிடப்பில் போடப்பட்டதால் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். எனவே, இப்பணியை விரைந்து முடிக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.திருப்போரூர் பேரூராட்சி பகுதியில் கடந்த 2019ம்  ஆண்டு பாதாள சாக்கடை திட்டப்பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்தப்  பணிகளுக்காக பேரூராட்சியில் உள்ள பல்வேறு தெருக்கள், சாலைகளின் நடுவே  பள்ளம் தோண்டப்பட்டு குழாய்கள் புதைக்கப்பட்டன. இதன் காரணமாக நான்கு  மாடவீதிகள், சான்றோர் தெரு, வணிகர் தெரு, புதுத்தெரு, திரவுபதை அம்மன்  கோயில் தெரு, கன்னியம்மன் கோயில் தெரு உள்ளிட்ட பல தெருக்களில் மக்கள்  நடமாட முடியாத அளவிற்கு குண்டும் குழியுமாக மாறின. இந்நிலையில், கடந்த  பிப்ரவரி மாதம் கந்தசுவாமி கோயில் தேரோட்டம் நடைபெற்றதால் நான்கு  மாடவீதிகள் மட்டும் சீரமைக்கப்பட்டது. பின்னர், திருவஞ்சாவடி தெரு, சிதம்பர  சுவாமிகள் மடம் தெரு உள்ளிட்ட சாலைகள் புதியதாக மாற்றப்பட்டன.

 இதையடுத்து,  கடந்த ஏப்ரல் மாதம் கன்னியம்மன் கோயில் தெரு, காந்தி தெரு, வணிகர் தெரு,  திரவுபதை அம்மன் கோயில் தெரு உள்ளிட்ட தெருக்களில் தார் சாலை அமைக்க  ஜல்லிக்கற்கள் கொட்டப்பட்டன. ஆனால், 2 மாதங்கள் நிறைவடைந்தும் இதுவரை சாலை சீரமைக்கப்படவில்லை. இதன் காரணமாக, பொதுமக்கள் ஜல்லி கற்களில் நடந்து செல்ல  முடியாமலும், வாகனங்களில் செல்ல முடியாமலும் கடும் வேதனைக்குள்ளாகி  உள்ளனர். இதுகுறித்து உயர் அதிகாரிகளுக்கு தெரிவித்தும் இதுவரை எந்த  நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. வணிகர் தெருவில் 1000 பேர் படிக்கும்  தனியார் பள்ளி உள்ளதால் அப்பள்ளி குழந்தைகள் இந்த ஜல்லிக்கற்கள் மீது  நடந்து செல்கின்றனர். ஜல்லிக்கற்களின் மீது அவசரத்திற்கு செல்ல முடியாத  நிலை உள்ளதால் அவற்றில் தார் ஊற்றி சாலை அமைக்கும் பணியை மாவட்ட நிர்வாகம்  விரைந்து முடிக்க வேண்டுமென பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Tags : Darsala ,Thiruporur municipality , Darsala work put on hold in Thiruporur municipality
× RELATED ரோடு ரோலர் வாகனம் கடைகள், பைக்குகள் மீது மோதி விபத்து