மாங்காடு அருகே நாட்டு வெடிகுண்டு வெடித்ததில் ரவுடி படுகாயம்: யாரை கொலை செய்ய தயாரித்தனர்: போலீசார் விசாரணை

சென்னை: மாங்காடு அருகே நாட்டு வெடிகுண்டு வெடித்ததில் ரவுடி படுகாயம் அடைந்தார். யாரை கொலை செய்ய இந்த வெடிகுண்டு தயாரிக்கப்பட்டது என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மாங்காடு அடுத்த பரணிபுத்தூர் நான்கு சாலை சந்திப்பு பகுதியில் நேற்று இரவு மோட்டார் சைக்கிளில் மூன்று பேர் சென்று கொண்டிருந்தனர். அப்போது, பையில் வைத்திருந்த, பேப்பர் பையில் இருந்து, ஒரு பொருள் கீழே விழுந்தது. அடுத்த விநாடி அது பயங்கர சத்தத்துடன் வெடித்துச் சிதறியது. இந்த சத்தத்தை கேட்டதும் அங்கிருந்த பொதுமக்கள் அதிர்ச்சியில், நாலாபுறமும் சிதறி ஓடினர். அங்கு என்ன நடக்கிறது என்று யூகிப்பதற்குள், அருகில் இருந்த டீ கடையின் கண்ணாடியும் நொறுங்கி விழுந்தது. இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த மோட்டார் சைக்கிளில் வந்த மூன்று பேரும் அங்கிருந்து மின்னல் வேகத்தில் தப்பித்து சென்று விட்டனர்.  இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் உடனடியாக மாங்காடு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த போலீசார், சம்பவம் நடைபெற்ற இடத்தை பார்வையிட்டு ஆய்வு நடத்தினர். அதில், நாட்டு வெடிகுண்டு வெடித்ததால் அதிக சத்தம் எழுந்து கண்ணாடி நொறுங்கியது தெரியவந்தது. இதையடுத்து, மோட்டார் சைக்கிளில் வந்த நபர்கள் யார். அவர்கள் எங்கிருந்து வந்தனர். எங்கு சென்று கொண்டிருந்தனர் என்று பல்வேறு கோணத்தில் விசாரணை நடத்திக் கொண்டிருந்தனர்.

இதில்,  காலில் பலத்த காயங்களுடன் கிடந்த  நபரை பிடித்து விசாரித்தனர். அவர், பூந்தமல்லி அடுத்த ஐயப்பன்தாங்கலை சேர்ந்த வினோத்குமார்(27) என்பதும், சரித்திர பதிவேடு குற்றவாளி என்பவதும், தனது நண்பர்களுடன் மோட்டார் சைக்கிளில் செல்லும்போது கையில் எடுத்து சென்ற நாட்டு வெடிகுண்டு தவறி கீழே விழுந்து வெடித்ததில் காயம் ஏற்பட்டது தெரியவந்தது. அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டதால், உடன் வந்த அவரது நண்பர்கள் அவரை பாதியிலேயே இறக்கி விட்டு தப்பிச் சென்றது, விசாரணையில் தெரியவந்தது. இவர்கள் யாரையாவது கொல்வதற்காக, சதித்திட்டம் தீட்டி நாட்டு வெடிகுண்டை எடுத்து சென்றார்களா அல்லது நாட்டு வெடிகுண்டுகளை வேறு யாருக்காவது சட்ட விரோதமாக விற்பனை செய்ய எடுத்துச் சென்றார்களா என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர். இதனிடையே ரவுடி வினோத்குமாரை போலீசார் சிகிச்சைக்காக அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.அவரை கைது செய்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், அவருடன் வந்த மற்ற இருவரையும் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். நாட்டு வெடிகுண்டு வெடித்து ரவுடி காலில் காயம்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: