×

பெண் குழந்தை பிறப்பு விகிதம் உயர்வு சிறப்பாக செயலாற்றிய 3 கலெக்டர்களுக்கு பதக்கம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்

சென்னை: பெண் குழந்தைகளின் பிறப்பு பாலின விகிதத்தை உயர்த்துவதற்காக சிறப்பாக செயலாற்றி சாதனை புரிந்த கோவை, தஞ்சாவூர் மற்றும் கரூர் மாவட்ட கலெக்டர்களுக்கு பதக்கங்கள் மற்றும் பாராட்டு பத்திரங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். மாநிலத்தின் அனைத்து வளர்ச்சியிலும் பெண்களுக்கு உரிய இடம் வழங்கும் பொருட்டு, தமிழ்நாடு அரசு சமூக நலம் மற்றும் சத்துணவு திட்டத்துறை என்ற பெயரை “சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை” என மாற்றம் செய்துள்ளது. பெண்கள், குழந்தைகள், மூத்த குடிமக்கள், திருநங்கையர் போன்றவர்களின் நலனை காத்திடும் வகையில் அரசு பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறது.

அந்த வகையில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை சார்பில் பெண் குழந்தைகளின் பிறப்பு பாலின விகிதத்தை உயர்த்துவதற்காக சிறப்பாக செயலாற்றி சாதனை புரிந்த மூன்று மாவட்டங்களுக்கு மாநில பெண் குழந்தைகள் பாதுகாப்பு தின விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. அந்தவகையில், 2022க்கான மாநில பெண் குழந்தைகள் பாதுகாப்பு தின விருதுகள், பெண் குழந்தைகளின் பிறப்பு பாலின விகிதத்தை உயர்த்திட பெருமுயற்சிகள் மேற்கொண்டு தீவிர கண்காணிப்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்தி சிறப்பாக செயலாற்றிய கோவை, கரூர், தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர்களுக்கு பதக்கம் மற்றும் பாராட்டு பத்திரம் வழங்கும் நிகழ்வு சென்னை தலைமை செயலகத்தில் நேற்று நடந்தது.

அப்போது, கோயம்புத்தூர் மாவட்ட கலெக்டர் ஜி.எஸ்.சமீரனுக்கு தங்கப் பதக்கமும், தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவருக்கு வெள்ளிப் பதக்கமும், கரூர் மாவட்ட கலெக்டர் த.பிரபுசங்கருக்கு வெண்கலப் பதக்கமும் மற்றும் பாராட்டுப் பத்திரங்களையும் முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். நிகழ்வில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் பி.கீதா ஜீவன், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை செயலாளர் ஷம்பு கல்லோலிகர், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்ட இயக்குநர் வே.அமுதவல்லி, சமூகநல இயக்குநர் த.ரத்னா, சமூக பாதுகாப்பு இயக்குநர் ச.வளர்மதி மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags : BC K. Stalin , Medal for 3 Collectors who excelled in raising the birth rate of female children: Presented by Chief Minister MK Stalin
× RELATED ஊட்டச்சத்து குறைபாடு உள்ள...