புறநகர் அரசு மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சை அளிக்க ஆக்சிஜன் வசதியுடன் கூடிய 400 படுக்கைகள் தயார்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

தாம்பரம்: தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த தமிழக அரசு சார்பில், தடுப்பூசி சிறப்பு முகாம் உட்பட பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன்படி, தாம்பரம் சானடோரியம் பகுதியில் உள்ள  காச நோய் மருத்துவமனையில், ஆக்சிஜன் வசதியுடன் கூடிய 100 படுக்கைகள் தயார் செய்யப்பட்டுள்ளன. இதனை மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், சுகாதாரத்துறை செயலர் செந்தில்குமார், செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ராகுல் நாத், எம்எல்ஏக்கள் தாம்பரம் எஸ்.ஆர்.ராஜா, பல்லாவரம் இ.கருணாநிதி, தாம்பரம் மாநகராட்சி மேயர் வசந்தகுமாரி கமலக்கண்ணன், துணை மேயர் கோ‌.காமராஜ், மண்டல தலைவர் எஸ்.இந்திரன், மாநகராட்சி ஆணையர் இளங்கோவன், செயற்பொறியாளர் முருகேசன் மற்றும் அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

பின்னர் அமைச்சர் அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களிடம் கூறுகையில், ‘‘தமிழகம், கேரளா, மகாராஷ்டிரா, அரியானா போன்ற மாநிலங்களில் கொரோனா தொற்று பரவல் மீண்டும் அதிகரித்து வருகிறது. இதனால், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்பேரில், கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வரும் மாவட்டங்களில் நேரடியாக சென்று ஆய்வு செய்து வருகிறோம். நேற்று தாம்பரத்தில் உள்ள காசநோய் மருத்துமனையில் கொரோனா சிகிச்சை அளிக்க கூடிய 100 படுக்கை வசதிகள் தயார் செய்யப்பட்டு உள்ளன.

இதேபோல் அருகில் உள்ள சித்த மருத்துவமனையில் 200 படுக்கை வசதிகள் தயாராக உள்ளன. செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் 100 படுக்கை வசதிகள் தயார் நிலையில் உள்ளன. செங்கல்பட்டு மாவட்டத்தை பொறுத்தவரை 95 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 60 வயதுக்கு மேல் உள்ளவர்கள், இணை நோய் உள்ளவர்கள் என 11 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், கொரோனா தொற்று பரவாமல் தடுக்க அவர்களையும், அவர்களைச் சார்ந்தவர்களையும் தீவிரமாக கண்காணித்து வருகிறோம்.

கொரோனாவல் உயிர் இழப்பு தமிழகத்தில் 3 மாதமாக ஏற்படவில்லை. நேற்று முன்தினம் தஞ்சாவூரில் 18 வயதுடைய பெண் ஒருவர் இறந்து உள்ளார். அவருக்கு எந்த இணை நோயும் இல்லாத நிலையில், அவர் காய்ச்சல் ஏற்பட்டு தனது வீட்டிலேயே அஜாக்கிரதையாக 2, 3 நாட்கள் இருந்துள்ளார். பின்புதான், அவர் தனியார் மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அங்கு கைவிரித்த நிலையில்தான் உயிர் இழப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் காய்ச்சலோ, சளி, தொண்டை நோய் போன்றவை ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரின் ஆலோசனையை பெறவேண்டும்.

தமிழகத்தை பொறுத்தவரை கொரோனா  பரவி வந்தாலும், அதன் சதவீதம் குறைவாகவே உள்ளது. இதுபோல் மாவட்டத்தில் உள்ள மருத்துவமனைகளில் 40 சதவீதம் நிரம்பினால் மட்டுமே புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்படும்.

தற்போது அந்த நிலை இல்லாததனால் தமிழகத்தில் புதிய கட்டுப்பாடுகள் விதிக்க வாய்ப்பு இல்லை,’’ என்றார். இதேபோல், கீழ்கட்டளை பல்லவா கார்டன் பகுதியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதையடுத்து, இப்பகுதியில் முகாம் ஏற்படுத்தப்பட்டு, அருகில் உள்ளவர்களின் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், தொற்று பாதிப்பு ஏற்பட்ட பகுதியை மக்கள் நலவாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று ஆய்வு மேற்கொண்டு, பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து கேட்டறிந்தார்.

Related Stories: