நாடு முழுவதும் ஆளுநர் மாளிகையை காங். முற்றுகை: சில இடங்களில் தள்ளுமுள்ளு, மோதல்

புதுடெல்லி: நேஷனல் ஹெரால்டு வழக்கில் ராகுல் காந்தியிடம் அமலாக்கத் துறை தொடர் விசாரணை மேற்கொண்டிருப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, நாடு முழுவதும் ஆளுநர் மாளிகையை நோக்கி காங்கிரஸ் நேற்று பேரணி நடத்தியது.

நேஷனல் ஹெரால்டு பங்கு விற்பனை  தொடர்பாக, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, முன்னாள் தலைவர் ராகுல் காந்தியிடம் விசாரணை நடத்துவதற்காக அமலாக்கத் துறை சம்மன் அனுப்பியது. சோனியாவுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு மருத்துவனையில் சேர்க்கப்பட்டு இருப்பதால், விசாரணைக்கு அவர் ஆஜராகவில்லை. அவரை வரும் 23ம் தேதி விசாரணைக்கு ஆஜராகும்படி அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி இருக்கிறது.

இந்நிலையில், ராகுல் காந்தியிடம் கடந்த புதன் கிழமை வரையில் தொடர்ந்து 3 நாட்கள் டெல்லி அமலாக்கத் துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். இதற்கு காங்கிரஸ் கடும் கண்டனம் தெரிவித்து, தொடர் போராட்டங்களை நடத்தி வருகிறது. டெல்லியில் நேற்று முன்தினம் போராட்டம் நடத்திய காங்கிரஸ் எம்பி.க்கள், தொண்டர்கள் கைது செய்யப்பட்டனர். நேற்று முன்தினம் 8 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்ட நிலையில், மீண்டும் இன்றும் விசாரணைக்கு ஆஜராகும்படி ராகுலுக்கு அமலாக்கத் துறை அதிகாரிகள் சம்மன் கொடுத்தனர்.

இது காங்கிரசில் கொந்தளிப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இதை கண்டித்து நாடு முழுவதும் ஆளுநர் மாளிகை முற்றுகை போராட்டத்தை காங்கிரஸ் அறிவித்தது. அதன்படி, அனைத்து மாநிலங்களிலும் காங்கிரஸ் தலைவர்களும், தொண்டர்களும் ஆளுநர் மாளிகையை நோக்கி நேற்று பேரணி நடத்தினர். அவர்களை போலீசார் தடுத்ததால் பல இடங்களில்  தள்ளுமுள்ளு ஏற்பட்டது. சில இடங்களில் தொண்டர்கள் வன்முறையில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

* சபாநாயகரிடம் எம்பி.க்கள் மனு

டெல்லியில் நேற்று முன்தினம் போராட்டம் நடத்திய காங்கிரஸ் எம்பி.க்கள் மீது போலீசார் தாக்குதல் நடத்தி, கைது செய்தனர். போலீசாரின் இந்த செயல் தொடர்பாக மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவிடம் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி தலைமையில் காங்கிரஸ் எம்பி.க்கள் நேற்று புகார் அளித்தனர். இந்த குழுவில் தமிழகத்தை சேர்ந்த எம்பி.க்கள் மாணிக்கம் தாகூர் ஜெயக்குமார், செல்லகுமார், விஜய் வசந்த் உள்ளிட்டோரும் இடம் பெற்றனர்.

* விசாரணைக்கு ஆஜராக அவகாசம் கோரி கடிதம்

நேஷனல் ஹெரால்டு வழக்கில் கடந்த 13, 14 மற்றும் 15ம் தேதிகளில் ராகுல் காந்தியிடம் அமலாக்கத் துறை 20 மணி நேரத்துக்கு மேல் விசாரித்தது. 4வது நாளாக இன்றும் விசாரணைக்கு ஆஜராகும்படி உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில், அமலாக்கத் துறைக்கு ராகுல் நேற்று எழுதியுள்ள கடிதத்தில், ‘கொரோனா காரணமாக சிகிச்சை பெற்று வரும் எனது தாயார் சோனியா காந்தியை கவனித்து கொள்ள வேண்டியுள்ளது. அதனால், நாளை (இன்று) விசாரணைக்கு ஆஜராவதில் இருந்து அவகாசம் வழங்க வேண்டும். 20ம் தேதி ஆஜராக தயாராக இருக்கிறேன்,’ என்று கூறியுள்ளார்.

* போலீசின் சட்டையை பிடித்த ரேணுகா சவுத்ரி

தெலங்கானாவில் நடந்த போராட்டத்தில் காங்கிரசின் மூத்த தலைவரும், முன்னாள் ஒன்றிய அமைச்சருமான  ரேணுகா சவுத்ரி கலந்து கொண்டு பேரணி சென்றார். அப்போது, தன்னை கைது செய்ய முயன்ற போலீஸ் அதிகாரியின் சட்டையை பிடித்து ரேணுகா ஆவேசமாக கேள்வி கேட்டார்.  இதனால், பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர், ரேணுகாவை பெண் போலீசார் வேனில் ஏற்றி காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். போலீசாரை பணி செய்ய விடாமல் தடுத்தது உட்பட பல்வேறு பிரிவுகளில் போலீசார் அவர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

Related Stories: