×

கிராம ஊராட்சிகளுக்கு வளம் சேர்க்கும் பசுமை பூங்கா திட்டம்: அசத்தும் பூவாணிகுப்பம் மக்கள்

கடலூர்: தமிழகத்தில் ஊராட்சி பகுதிகளில் உள்ள விவசாயிகளுக்கு வளம் சேர்க்கும் வகையில் அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. கிராம ஊராட்சிகளில் அடிப்படை பிரச்னைகளான தரிசு மற்றும் புறம்போக்கு நிலங்கள் ஆக்கிரமிப்பு போன்றவற்றை மாற்றியமைக்கும் வகையில் பசுமை பூங்காக்கள் அமைக்கும் திட்டம் மேற்கொள்ளப் பட்டுள்ளது. கடலூர் மாவட்டத்தில் இத்திட்டத்தில் முன்னோடி கிராமமாக பூவாணி குப்பம் கிராமம் அமைந்துள்ளது. கால்நடை  வளர்ப்பு, ஏரி குளங்களில் மீன் வளர்ப்பு என செழித்திருக்கும் இக்கிராமத்தில் ஊராட்சிக்கு சொந்தமான 9 ஏக்கர் நிலம் ஆக்கிரமிப்பில் இருந்தது கண்டறியப்பட்டு பின்னர் மீட்கப்பட்டு பசுமை பூங்கா அமைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்படி கடலூர் மாவட்ட நிர்வாகத்தின் வழிகாட்டுதலில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் மூலம் கால்நடை தீவனம் வளர்ப்பு, நன்னீர் மீன் வளர்ப்பு ,பழத்தோட்டங்கள், பல்வேறு வகை பயன் தரும் மரங்கள், பூங்கா, நாற்று வகைகள் தயாரித்தல், என பூவாணி குப்பம் ஊராட்சியில் மீட்கப்பட்ட 9 ஏக்கர் நிலத்தில் திட்டத்தின் வாயிலாக அப்துல் கலாம் பெயரில் பசுமை பூங்கா செயல்படுத்தப்படுகிறது.
 
பூங்காவின் வளம் ஊராட்சிக்கு பலம் சேர்க்கும் வகையில் கிராம மக்களுக்கும் விவசாயிகளுக்கும் பயன் தரும் வகையில் உள்ளது பசுந்தீவனம் ஊராட்சியில் உள்ள கால்நடை வளர்ப்போருக்கு முன்னுரிமை அடிப்படையில் இலவசமாக வழங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதுபோன்று பழம் மற்றும் காய்கறி சாகுபடி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் மூலம் அக்கிராம மக்களை கொண்டே சாகுபடி செய்யப்பட்டு விற்பனையின் மூலம் ஊராட்சிக்கு பொருளாதார முன்னேற்றத்திற்கு வழிகாட்டுகிறது. விவசாயி களுக்கு பூங்காவில் பணியாற்றுவதன் மூலம் தினக்கூலி சாகுபடியின் மூலம் ஊராட்சிக்கு பொருளாதார வரவு என பயன்தரும் வகையில் திட்டம் அமைக்கப்பட்டுள்ளது.
 
தற்பொழுது நன்னீர் மீன் வளர்ப்பு விற்பனைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு தொடங்கப்பட்ட இத்திட்டத்தின் வாயிலாக கால்நடைத் தீவனம் , மரக்கன்றுகள் தற்போது செழித்து வளர்ந்துள்ளது. இதுபோன்று பல்வேறு வகையிலும் பலன் தர தொடங்கியுள்ளது. இதுகுறித்து மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட அலுவலர் பவன்குமார் கிரிய பவனார் கூறுகையில்,
 
மாவட்டத்தில் குறிஞ்சிப்பாடி ஒன்றியம் பூவாணி குப்பம் முன்னோடி கிராமமாக செயல்பட்டு வரும் நிலையில் தற்போது விருதாச்சலம் ஒன்றியம் எருமனூர் இல் 12 ஏக்கரில் திட்டம் செயல்பட நடவடிக்கை மேற்கொள்ளப் பட்டுள்ளது. இதுபோன்று மாவட்டத்தில் அனைத்து ஊராட்சிகளிலும் சம்பந்தப்பட்ட பஞ்சாயத்துக்கள் அரசு நிலங்கள் பயன்பெறும் வகையில் திட்டத்தில் இணைந்து பயன்பெறலாம் என்றார்.

Tags : Green Park Project to Enrich Village Panchayats: Awesome Poovanikuppam People
× RELATED மக்களவை தேர்தலில் வாக்களிப்பதற்காக...