×

கசாப்பு கடை பணியில் கலக்கும் பெண்கள்

நன்றி குங்குமம் தோழி

தென்னிந்தியாவில் பெரும்பாலோர் அசைவம் சாப்பிடுபவர்களாக உள்ள நிலையில் அவர்களுக்கு ஃப்ரெஷ்ஷான இறைச்சி மற்றும் மீன் போன்ற கடல் உணவுகளை சுத்தமாக எப்படி தருவது என்ற கனவை அடிப்படையாக கொண்டு கடந்த 2016 ஜனவரியில் உருவாக்கப்பட்டது இந்த டெண்டர் கட்ஸ். சென்னை மற்றும் ஐதராபாத்தில் மட்டுமே 4 லட்சத்து 50 ஆயிரம் வாடிக்கையாளர்களை கொண்டுள்ளது இந்த இறைச்சிக் கடை. தங்களின் வாடிக்கையாளர்களுக்காக சென்னை மற்றும் ஐதராபாத்தில் குடோன்கள் அமைக்கப்பட்டு அங்கிருந்து சுத்தமான இறைச்சி மற்றும் கடல் சார்ந்த உணவுகளை சப்ளை செய்து வருகின்றனர்.

இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் உலக சுகாதார அமைப்பின் விதிமுறைகளை பின்பற்றி உணவினை சப்ளை செய்து வருகிறார்கள். கால்நடை பண்ணைகள் மற்றும் மீனவர்களிடம் இருந்து நேரடியாக கொள்முதல் செய்து, எந்த வித ரசாயனம் கலந்தோ, பதப்படுத்தி வைத்தோ விற்பனை செய்யாமல், ஃப்ரெஷ்ஷாக கொடுத்து வருகிறார்கள். தற்போது கொரோனா காலம் என்பதால் கிருமிநாசினி தெளித்த கத்திகளையே இறைச்சியினை வெட்ட பயன்படுத்துகின்றனர். டெலிவரி செய்யும் வாகனங்கள் ஒவ்வொரு முறை நிறுவனத்துக்கு வந்த பிறகு முழுமையாக சானிடைசர் தெளிக்கப்பட்டு சுத்தம் செய்யப்படுகிறது.

‘‘பொதுவாக இறைச்சியை 0 டிகிரி முதல் 4 டிகிரி வரை வெப்பநிலையில்தான் வைக்க வேண்டும் என்பது விதிமுறை. ஆனால் இதனை அமல்படுத்தினால் நகரத்தில் எங்குமே இறைச்சி கடை இருக்காது. ஏழாண்டுகளுக்கு முன் ஒரு முறை இறைச்சி வாங்க கடைக்கு சென்ற போது, அந்த இடம் அசுத்தமாகவும், சுகாதாரம் இல்லாமலும் இருந்தது. அப்போது தான் நாம் ஏன் சுகாதார முறையில் ஒரு இறைச்சி கடையினை அமைக்கக்கூடாதுன்னு எண்ணம் ஏற்பட்டது. இது குறித்து உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளை சந்தித்த போது, இந்த தொழிலுக்கு நல்ல வாய்ப்பு இருப்பதை உணர்ந்தேன்” என்று கூறும் நிஷாந்த் இறைச்சி வெட்டும் தொழிலில் பெண்களையும் நியமித்துள்ளார்.

சென்னை கீழ்க்கட்டளை, துரைப்பாக்கம், அண்ணாநகர், நீலாங்கரை, வேளச்சேரி என சென்னையில் மட்டுமே 16 இடங்களில் உள்ள இவர்களின் கடைகளில் பெண்களும் கசாப்பு வேலையில் ஈடுபட்டு வருகிறார்கள். கீழ்க்கட்டளையில், ஆட்டுக்கறி வெட்டும் தொழிலை கடந்த 3 மாதமாக பதுல்லா பீவி (42) செய்து வருகிறார்.

‘‘சிக்கன் மற்றும் ஆட்டுக்கறி வெட்டும் தொழிலை முன்பு ஆண்கள் மட்டு தான் செய்து வந்தனர். இப்போது நாங்களும் அந்த தொழிலில் களம் இறங்கி இருக்கிறோம். மூன்று மாத அனுபவம் தான் என்றாலும், எத்தனை ஆர்டர்கள் வந்தாலும் நேரம் தவறாமல் வாடிக்கையாளர்களுக்கு வெட்டி அனுப்பி வைக்கிறோம். பொதுவாக வீட்டில் இறைச்சிகளை பெண்கள் தான் சுத்தம் செய்து அதை சமையலுக்கு ஏற்ப சின்னச் சின்ன துண்டுகளாக வெட்டுவார்கள். அப்படி இருக்கும் ேபாது, கடைகளில் பெரிய அளவில் வெட்டும் போது நாம் ஏன் கூச்சப்படவேண்டும்’’ என்றார்.

‘‘நான் இங்கு வேலைக்கு சேர்ந்து ஒரு வருடமாகிறது. சிக்கனில் தோல் நீக்கி மற்றும் மட்டனை அவர்கள் விரும்பும் விதத்தில் வெட்டிக் கொடுப்பேன். ஆனால் மீன் வெட்டும் போது ரொம்ப ஜாக்கிரதையா வெட்டணும். காரணம் அதன் உள் உறுப்புகளை சரியாக நீக்கவில்லை என்றால் மீனை சாப்பிட முடியாது’’ என்கிறார் 38 வயது நிரம்பிய நித்யா கண்ணன். துரைப்பாக்க கிளையில் கடந்த ஒரு வருடமாக பணியாற்றி வரும் சின்ன பொண்ணு, ‘‘ஆரம்பத்தில் ரொம்பவே கஷ்டமா இருந்தது.

சிக்கனின் தோல் நீக்கி கேட்பாங்க. அதை சரியான முறையில் நீக்கணும். அதே போல் போன்லெஸ் சிக்கன் துண்டுகளையும் பதமாக வெட்ட வேண்டும். மட்டன் பொறுத்தவரை அதன் எலும்பு சிக்கனை விட கொஞ்சம் வலுவாக இருக்கும். அதை வெட்டுவதற்கு அரிவாளை தூக்கி தூக்கி ஆரம்பத்தில் கை ரொம்ப வலிக்கும். இரவு தூங்கவே முடியாது. இப்போது பழகி விட்டது’’ என்கிறார் மட்டன் சாப்ஸ் துண்டுகள் போட்டபடி.

‘‘எங்க கடையில் வேலை செய்யும் பெண்களுக்கு முதலில் மீனை எவ்வாறு வெட்ட வேண்டும் என்று தான் சொல்லித் தருவோம். காரணம் அதை சரியாக துண்டு போட வேண்டும். அதே போல் ஒவ்வொரு மீனுடைய குடல் பகுதியையும் அதற்கு ஏற்ப நீக்க வேண்டும். அதில் அவர்கள் நன்கு தேர்ச்சி பெற்ற பிறகு தான் மட்டன் மற்றும் சிக்கனை வெட்ட சொல்லித் தருவோம். இறைச்சி மற்றும் கடல் சார்ந்த உணவுகள் எதுவாக இருந்தாலும், அதனை எங்க ஆப் மூலம் புக் செய்யலாம்.

அதிகபட்சமாக 2 மணி நேரத்தில் சென்னையில் எல்லா இடங்களிலும் எங்களால் சப்ளை செய்ய முடியும். வாடிக்கையாளர்களின் தேவைக்கு ஏற்ப பிரியாணியில் போடுவதற்கான மட்டன் பீஸ்கள், சிக்கன் லாலிபாப்கள், எலும்பில்லாத கறி, கடக்நாத் சிக்கன் என விதவிதமாக வெட்டித் தருகிறோம். அனைத்தும் நன்கு சுத்தம் செய்யப்பட்டு பேக்கிங் செய்து குறைந்த விலையில் வீட்டுக்கே டெலிவரி செய்கிறோம்’’ என்றார் நிஷாந்த்.

தொகுப்பு: தி.ஜெனிஃபா

படங்கள்: ஜி.சிவக்குமார்

Tags : Women ,
× RELATED கஞ்சா கடத்திய 2 பெண்கள் கைது