காயத்தில் இருந்து முழுமையாக மீளவில்லை; இங்கிலாந்து டெஸ்ட்டிலும் கே.எல்.ராகுல் சந்தேகம்: சுப்மன்கில்லுக்கு வாய்ப்பு

மும்பை: தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான டி20 தொடரில் கேப்டன் பொறுப்பு ஏற்றிருந்த நிலையில் ஏற்பட்ட காயம் காரணமாக விலகிய கே.எல்.ராகுல் இங்கிலாந்துக்கு எதிராக நடைபெற உள்ள டெஸ்ட் போட்டியிலும் விளையாட மாட்டார் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

இதுதொடர்பாக பிசிசிஐ அதிகாரி ஒருவர் கூறுகையில், கே.எல்.ராகுல் இன்னும் காயத்திலிருந்து மீளவில்லை. டெஸ்ட் தொடரில் விளையாடும் வீரர்கள் மும்பையில் ஒன்றுகூடுகின்றனர். அங்கிருந்து நள்ளிரவில் இங்கிலாந்து புறப்படுகின்றனர். கே.எல். ராகுல் அந்த அணியுடன் பயணிக்கவில்லை. இந்த வார இறுதியில் உடற்தகுதித் தேர்வில் ராகுல் பங்கேற்க உள்ளார். எனினும், காயத்திலிருந்து மீள அவர் கூடுதல் நேரம் எடுத்துக்கொள்ள உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து கே.எல்.ராகுல் இடத்தில் ரோஹித்சர்மாவுடன் டெஸ்ட்டில் சுப்மன் கில் தொடக்கத்தில் களமிறங்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது, அணியில் ஷ்ரேயாஸ் அய்யர், புஜாரா, ஹனுமா விஹாரி ஆகியோர் ஆடும் லெவனில் இருப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது மிக சிறந்த முறையில் ஆடிவரும் இங்கிலாந்து அணிக்கு எதிராக இந்திய அணி வலுவான வீரர்களை களமிறக்க வேண்டும். ரோஹித் சர்மா, சுப்மன் கில், புஜாரா, விராட்கோஹ்லி, ஸ்ரேயஸ் அய்யர், ஹனுமா விஹாரி, ரிஷப் பன்ட், அஸ்வின், ஷமி, பும்ரா, சிராஜ் அல்லது பிரசித் கிருஷ்ணா களமிறங்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

24ம் தேதி, கவுண்டி அணிக்கு எதிராக இந்திய அணி விளையாட உள்ளது. அடுத்து ஜூலை 1 முதல் 5ஆம் தேதிவரை, இங்கிலாந்தை எதிர்த்து, 2021 ஆம் ஆண்டு ஒத்திவைக்கப்பட்ட ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாட உள்ளது. முன்னதாக கடந்த ஆண்டில் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் முதல் 4 போட்டிகள் நடந்து முடிந்துள்ள நிலையில், கொரோனா காரணமாக ஒரு போட்டி ஒத்திவைக்கப்பட்டிருந்தது. இந்தியா தொடரில் 2-1 என்று முன்னிலை வகிக்கிறது.

இந்த டெஸ்ட்டில் வென்று தொடரை சமன் செய்ய இங்கிலாந்து நிச்சயம், அதுவும் புதிய தலைமை பென் ஸ்டோக்ஸ் மற்றும் புதிய பயிற்சியாளர் மெக்கல்லம் வழிகாட்டுதலில் இந்திய அணிக்கு கடும் நெருக்கடி கொடுக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

இந்த டெஸ்ட்டில் விராட் கோஹ்லி, ரோஹித் சர்மா போன்ற மூத்த வீரர்கள் தங்கள் தரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினால் நிச்சயம் இங்கிலாந்து அணியை வீழ்த்தமுடியும் என்று கிரிக்கெட் வல்லுனர்கள் கூறுகின்றனர்.

Related Stories: