×

டெல்லியில் காங். எம்.பி.க்களை கைது செய்த போலீஸ் நாடாளுமன்ற உறுப்பினர்களின் அடிப்படை உரிமையை மீறிவிட்டது: ப.சிதம்பரம் கண்டனம்

சென்னை: டெல்லியில் காங்கிரஸ் எம்.பி.க்களை கைது செய்த போலீஸ் நாடாளுமன்ற உறுப்பினர்களின் அடிப்படை உரிமையை மீறிவிட்டது என்று முன்னாள் ஒன்றிய நிதியமைச்சர் ப.சிதம்பரம் கண்டனம் தெரிவித்துள்ளார். நேஷனல் ஹெரால்டு பங்கு விற்பனை தொடர்பாக காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தியிடம் ஒன்றிய அமலாக்கத்துறை அதிகாரிகள் கடந்த 3 நாட்கள் தீவிர விசாரணை மேற்கொண்டனர். இதை கண்டித்து காங்கிரஸ் சார்பில் நாடு முழுவதும் 3வது நாளாக நேற்றும் போராட்டங்கள் தொடர்ந்தன. இதில், டெல்லி காங்கிரஸ் அலுவலகத்திற்குள் போலீசார் புகுந்து குண்டுக்கட்டாக தூக்கி சென்று அப்புறப்படுத்தி காயப்படுத்தியதற்காக காங்கிரஸ் எம்.பி.க்கள் குற்றம் சாட்டினர்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு மாநிலங்களின் ஆளுநர் மாளிகை முன்பு காங்கிரஸ் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்கள். இந்நிலையில், டெல்லியில் காங்கிரஸ் எம்.பி.க்களை கைது செய்த போலீஸ் நாடாளுமன்ற உறுப்பினர்களின் அடிப்படை உரிமையை மீறிவிட்டது என்று ப.சிதம்பரம் கடுமையாக சாடியுள்ளார். எழுத்துபூர்வமான எந்த ஆணையும் இன்றி காங்கிரஸ் எம்.பி.க்களை 12 மணி நேரம் கைது செய்து வைத்திருந்ததாக குற்றம்சாட்டிய ப.சிதம்பரம், எம்.பி.க்களை எதற்காக கைது செய்தது என்ற விளக்கத்தையும் டெல்லி போலீஸ் அளிக்கவில்லை என புகார் கூறியுள்ளார்.

கைது செய்த எம்.பி.க்களுக்கு உணவும், தண்ணீரும் கூட டெல்லி போலீஸ் அளிக்க மறுத்துவிட்டதாக குற்றம்சாட்டிய அவர், கைது செய்த காங்கிரஸ் எம்.பி.க்களை அரியானா எல்லையில் உள்ள இடங்களுக்கு கொண்டு சென்று அலைக்கழித்ததாக கண்டனம் தெரிவித்துள்ளார். 3 நாட்களாக காங்கிரஸ் எம்.பி.க்கள், தொண்டர்களை போலீஸ் தாக்கியது பற்றி ராஜ்யசபா தலைவரிடம் புகார் செய்துள்ளதாகவும்  ப.சிதம்பரம் தம் பேட்டியில் தெரிவித்திருக்கிறார்.


Tags : Kong ,Delhi ,MM GP ,Ps ,P. Chidambaram , Delhi, Cong. MP, arrested, police, P. Chidambaram
× RELATED இந்தியாவில் பிரதமர் மோடி ஊழல் பள்ளியை...