கலைஞரின் கனவுகளை சாதனையாக மாற்றுபவர் முதல்வர் மு.க.ஸ்டாலின்: திருச்சி சிவா எம்.பி. பேச்சு

பெரம்பூர்: கலைஞர் கண்ட கனவுகளையெல்லாம் முதல்வர் மு.க.ஸ்டாலின் சாதனைகளாக மாற்றி வருகிறார் என்று திருச்சி சிவா எம்பி பேசினார். சென்னை கிழக்கு மாவட்டம் வில்லிவாக்கம் கிழக்கு பகுதி திமுக சார்பில், ‘’வேருக்கு விழா - செம்மொழி மேதை திராவிட பாதை’’ என்னும் தலைப்பில் கலைஞரின் 99வது பிறந்தநாளையொட்டி கொள்கை மொழியரங்கம் அயனாவரம் போர்ச்சியஸ் சாலையில் நடைபெற்றது. இதற்கு வில்லிவாக்கம் பகுதி செயலாளர் வாசு தலைமை வகித்தார்.

இதில் இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு பேசியது; கலைஞர் நினைத்ததையெல்லாம் செய்து முடிக்கக்கூடிய முதல்வராக மு.க.ஸ்டாலின் திகழ்கிறார். வானம் உள்ளவரை, கடல் உள்ளவரை, காற்று உள்ளவரை பூமி சுழலும் வரை தமிழ்நாட்டில் எல்லா காலங்களிலும் கலைஞரின் புகழ் தொடர்ந்து இருக்கும். தமிழ்நாட்டு மக்களின் சுபிட்சத்திற்காக எந்நாளும் திமுக பாடுபடும். இவ்வாறு பேசினார்.

திருச்சி சிவா எம்பி பேசும்போது, ‘இந்தியாவிலேயே 80 ஆண்டுகள் பொது வாழ்க்கைக்கென்று அர்ப்பணித்த ஒரே தலைவர் கலைஞர். தமிழ்நாட்டை முன்னேற்ற பாதைக்கு கொண்டு வந்ததில் கலைஞர் ஓர் அடையாளம். கட்சியை கடந்து தமிழ் உணர்வு கொண்ட அனைவரும் கொண்டாட வேண்டிய பிறந்த நாள் இது. தூக்கி எறியப்பட்ட இடத்தில் இன்று கம்பீரமாக நிலைத்து நிற்கிறார் கலைஞர். இதற்கு முதல்வருக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன். கலைஞர் கண்ட கனவுகளையெல்லாம் சாதனைகளாக தற்போதைய முதல்வர் சாத்தியப்படுத்தி வருகிறார். ஆட்சிக்கு வந்து ஓராண்டு காலத்தில் 70 சதவீத தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளது. 5 ஆண்டுகளில் தமிழகம் முதல் மாநிலமாக மாற்றி காட்டப்படும்’ என்றார். நிகழ்ச்சியில், தேர்தல் பணிக்குழு செயலாளர் கம்பம் பெ.செல்ேவந்திரன், வெற்றி அழகன் எம்எல்ஏ, முன்னாள் எம்எல்ஏ ப.ரங்கநாதன். வட்ட செயலாளர்கள் காஞ்சி துரை.வேதா உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Related Stories: