×

முசிறி அருகே நெய்வேலி கிராமத்தில் மீன்பிடி திருவிழா: பொதுமக்கள் மகிழ்ச்சி

முசிறி: முசிறி அருகே நெய்வேலி கிராமத்தில் மீன்பிடி திருவிழா நடைபெற்றது. விரால், கெண்டை, ஜிலேப்பி, கெழுத்தி, வாளை மீன் அதிகம் கிடைத்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். திருச்சி மாவட்டம் முசிறி தாலுகாவில் நெய்வேலி கிராமம் அமைந்துள்ளது. இங்கு அமைந்துள்ள ஏரி மழைக்காலத்தில் தண்ணீரால் நிரம்பி இருந்தது. கோடை முடியும் தருவாயில் ஏரியிலிருந்து தண்ணீரும் வற்ற தொடங்கியுள்ளது. இதையடுத்து கிராம மக்கள் ஒன்று கூடி மீன்பிடி திருவிழாவை நடத்த திட்டமிட்டனர். இதையடுத்து, ஏரியில் ஒன்றுகூடிய பொதுமக்களுக்கு மீன் பிடிப்பதற்கு தலைவர் துண்டை உயர்த்தி சைகை காட்டினார்.

அதனை தொடர்ந்து கரையில் நின்றிருந்த பொதுமக்கள் ஏரியில் தேங்கியிருந்த தண்ணீரில் பாய்ந்தனர். தங்களிடமிருந்த அரிவலை, வார் வலை, தவுள் வலை உள்ளிட்ட மீன்பிடி வலைகள் மற்றும் கூடைகள், கத்தா, வேஷ்டிகள், ஆகியவற்றின் மூலம் மீன்களை பிடித்தனர். சிறுவர்-சிறுமிகள் கரையோரத்தில் துள்ளிக் குதித்த சிறு மீன்களை பிடித்து மகிழ்ந்தனர். இதுகுறித்து கிராமவாசி யோகநாதன் என்பவர் கூறும்போது.

பாரம்பரிய முறையில் ஏரியில் மீன் பிடிக்கும்போது சேற்றுக் குளியல் உடலுக்கு ஆரோக்கியம் என்பதாலும், தண்ணீரில் உள்ள மீன் முட்டைகள் சேற்றில் அழுத்தப்படுவதால் மீண்டும் தண்ணீர் வரும்போது அந்த மீன்களின் முட்டைகள் பெரிந்து குஞ்சுகள் வளர்ச்சி அடையும் என்பதாலும் இந்த பாரம்பரிய மீன்பிடித் திருவிழா நடத்தப்படுகிறது. இந்த மீன்பிடி திருவிழா மூலம் இயற்கைக்கும் மனிதனுக்கும் உள்ள சங்கிலித்தொடர் போன்ற இணைப்பை புதுப்பிக்கவும்,இளைய தலைமுறைக்கு ஏரி கண்மாய் குளம் ஆகியவற்றின் அவசியத்தை உணர்த்துவதாக இருந்தது என்று கூறினார்.

மீன்பிடித் திருவிழாவின்போது விரால், ஜிலேபி, கெண்டை, வயரா, வாளை, கெளுத்தி உள்ளிட்ட பல்வேறு மீன்களும் கிடைத்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். நன்கு வளர்ச்சி அடைந்த மீன்கள் கிடைத்தது குறிப்பிடத்தக்கது. நெய்வேலி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமத்தைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் மீன்பிடி திருவிழாவில் கலந்து கொண்டனர்.

Tags : Naiveli ,Musiri , Neyveli Village, Fishing Festival, Public Delight
× RELATED சாலப்பட்டியில் இடமாற்றம் செய்யப்பட்ட ரேஷன் கடை திறப்பு