×

காரைக்காலில் கடலில் குளிப்பவர்களை கடிக்கும் ஜெல்லி மீன்கள்: ஒவ்வாமையால் குளியல் பிரியர்கள் அவதி

காரைக்கால்: காரைக்காலில் தடையை மீறி கடலில் குளிப்பவர்களை சொறி மீன்கள் என்றழைக்கப்படும் ஜெல்லி மீன் கடிப்பதால், அரசு மருத்துவமனையில் அரிப்பு, தோல் ஒவ்வாமைக்காக ஏராளமானோர் சிகிச்சை பெற்றுச் செல்கின்றனர். காரைக்கால் போலீசாரின் தடையை மீறி ஏராளமானோர் இறங்கிக் குளிக்கின்றனர். அதிக வெயில் காரணமாக நிறையபேர் கடற்கரைக்கு வருகின்றனர். உள்ளூர்காரர்கள் மட்டுமன்றி, சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் திருநள்ளாறு சனி பகவான் கோயிலுக்கு வரும் வெளியூர் வாசிகள் கடலில் குளிக்கின்றனர்.

கடலில் சூழல், ஆழம், நீரோட்டம் காரணமாக குளிப்பவர்கள் மூழ்கி இறக்கின்றனர். கடலோர பாதுகாப்பு போலீசார் விசிலோடு கடற்கரையில் கண்காணிப்புப் பணியை மேற்கொண்டபோதும், பறந்து விரிந்த பரப்புக்கு போலீசார் எண்ணிக்கை சொற்பமானதாகவே இருக்கிறது. மேலும் போலீசாருக்கு கடலில் விழுந்தவர்களை படகு மூலமோ, நீந்தியோ காப்பாற்றும் பயிற்சி இல்லை. கடலில் குளிக்கும் பொது மூழ்கி உயிருக்கு தத்தளிப்பவர்களை படகு ஒட்டவும் தெரியாமல், நீச்சல் தெரியாமல் போலீசார் எப்படி மீட்க முடியும் என பொதுமக்கள் கேள்வியெழுப்புகின்றனர்.

இது ஒருபுறமிருக்க கடலில் தற்போது சொறி மீன்கள் எனப்படும் ஜெல்லி மீன்களின் வரத்து அதிகரித்திருக்கிறது. ஒளிரும் தன்மையும், மெல்லுடலும் கொண்ட இம்மீன்கள் தண்ணீரின் நிறத்தில் காணப்படுகின்றன. பசையும், பற்றும் நுண்ணுணர்வு இழைகளும் இருப்பதால் மனிதர்களின் உடலில் எளிதில் ஒட்டிக் கொள்கின்றன. அப்போது, அவை உடலிலிருந்த்து விஷத்தன்மை கொண்ட திரவம் சுரக்கிறது. இந்த திரவம், கடலில் குளிப்பவர்கள் மேல் தோலில் ஒவ்வாமையையும், அரிப்பையும் ஏற்படுத்துகின்றன. மூச்சுக்குழலில் ஒவ்வாமை ஏற்படும்போது சிலர் மூச்சுத் திணறலாலும் அவஸ்தைப்படுகின்றனர்.

பெருங்கடல் பகுதிகளில் அதிகமாக வாழும் இந்த மீன்கள் சீதோஷண நிலை, நீரோட்டம் காரணமாக கரையொதுங்குகின்றன. வேளாங்கண்ணி, நாகூர் கடற்கரைகளில் கரையொதுங்கி வந்த இந்த ஜெல்லி மீன்கள் காரைக்கால் கடற்கரையிலும் நிறைய ஒதுங்குகின்றன. கடலில் குளிப்பவர்கள் உடலில் இவை படுவதால், ஒவ்வாமை ஏற்பட்டு காரைக்கால் அரசு பொது மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவிலும், புற நோயாளிகள் பிரிவிலும் சிகிச்சை பெற்று திரும்புகின்றனர். உயிரிழப்பு ஏதும் இல்லை என்றபோதும், கடலில் குளிப்பவர்களை தடுக்க மெகாபோன், ஒலிபெருக்கி, எச்சரிக்கை பலகை தேவைக்கு மேலும் கடலோர காவல் போலீசாரின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டு கண்காணிப்பும் தீவிர படுத்தப்பட வேண்டும் என புதுச்சேரி அரசுக்கு சுற்றுலா வரும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Karaicol , Karaikal Sea Bathing, Jellyfish, Allergies,
× RELATED காரைக்கால் மாணவன் உயிரிழப்பு: விசாரணை...