×

நெல்லை அருகே ராஜபதி கோயில் விழாவில் நூதனம் ஆட்டு கிடாக்களை சாமிக்கு வெட்டி ரத்தக்குளியல்

நெல்லை: நெல்லை அருகே ராஜபதியில் காலாங்கரையான் சுடலை மாடசாமி கோயில் கொடை விழாவில் ஆட்டுகிடாக்களை சாமிக்கு வெட்டி ரத்தக்குளியல் நடத்தி, மண்சட்டியில் ரத்தமும், மண்டையோட்டில் மாவிளக்கு உண்ணும் நிகழ்ச்சியும் நடந்தது. நெல்லை கங்கைகொண்டான் அருகே காலாங்கரையான் சுடலை மாடசாமி கோயிலில் ஆண்டுதோறும் வைகாசி மாதம் கடைசி செவ்வாய்கிழமையில் கோயில் கொடை விழா நடப்பது வழக்கம். துடிப்பான தெய்வங்களில் ஒன்றான காலாங்கரையானின் பூர்வீக கதைகள் அப்பகுதி மக்களை வெகுவாக கவரும்.

150 ஆண்டுகளுக்கு முன்பு ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் ராஜபதி பகுதியில் ஒரு ஆங்கிலேய அதிகாரி குதிரையில் உலா வந்துள்ளார். அப்போது குதிரை நடக்க முடியாமல் நொண்டி அடித்ததால், கோயிலில் இருந்த சப்பாணி மாடசாமி நகைத்துள்ளார். அவரது நகைப்பை கண்டு எரிச்சல் அடைந்த ஆங்கிலேயே அதிகாரி துப்பாக்கியால் சுட்டுள்ளார். இதில் சப்பாணி மாடசாமிக்கு காயம் ஏற்பட்டது. இதை கண்டு வெகுண்டு எழுந்த காலாங்கரையான், அந்த இடத்திலேயே ஆங்கிலேய அதிகாரியை கொன்றார்.

மக்களை கவர்ந்த காலாங்கரையானுக்கு ராஜபதி கோயிலில் ஆண்டுதோறும் சிறப்பு செய்யப்பட்டு வருகிறது. மேலும் அங்குள்ள 21 பரிவார தேவதைகளுக்கும் கோயில் திருவிழா நாளில் சிறப்பு அபிஷேகம், அசைவ படைப்புகள் இடப்பட்டு, பொதுமக்கள் கொடை விழாவை சிறப்பாக நடத்துவர். வைகாசி மாதத்தின் கடைசி செவ்வாய் கிழமையான நேற்று முன்தினம் கங்கைகொண்டான் ராஜபதியில் காலாங்கரையானுக்கு கொடை விழா நடந்தது. இவ்விழாவின் முக்கிய நிகழ்வான சாமிக்கு ரத்த குளியல் வழக்கம்போல் இவ்வாண்டும் பக்தர்களை கவர்ந்தது.

அங்குள்ள மாரியம்மன் சன்னதி முன்பு பெரிய குழி வெட்டி, தண்ணீர் நிரப்பி அதில் ஆட்டுக்கிடாக்களை வெட்டி ரத்த வெள்ளமாக மாற்றினர். அதில் சாமி கொண்டாடி இறங்கி குளியல் நடத்தினார். மேலும் மண்சட்டி மூடியில் ரத்தம் குடித்தார். பின்னர் மனித மண்டையோட்டில் மாவிளக்கு ஏந்தி சாமியாடினார். பக்தர்களை பரவசப்படுத்திய இந்நிகழ்ச்சி முடிந்ததும், பக்தர்கள் சாமி கொண்டாடி முன்பு விழுந்து வணங்கி ஆசி பெற்றனர். இத்திருவிழாவில் சுற்றுவட்டார பகுதி மக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

Tags : Rajpati temple ,Nellai ,Sami , Nellai, Rajapathi temple festival, cutting goat calves for Sami and bathing in blood
× RELATED நெல்லை மக்களவைத் தொகுதியில் தேர்தல் விதிகளை மீறியதாக 564 வழக்குகள் பதிவு..!!