×

புதுச்சேரியில் ஆளுநர் மாளிகை நோக்கி காங்கிரசார் முற்றுகைபேரணி: போலீஸ்- போராட்டக்காரர்கள் இடையே தள்ளுமுள்ளு

புதுச்சேரி: ராகுல்காந்தியிடம் அமலாக்கத்துறையினர் விசாரணை நடத்துவதற்கு எதிரிப்பு தெரிவித்து, காங்கிரசார் நாடு முழுவதும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இன்று புதுசேரியில் ஆளுநர் மாளிகைக்கு முன்பாக காங்கிரசார் ஆர்பாட்டம் நடத்தினர். மறைந்த முன்னாள் பிரதமர் நேரு நிறுவிய நேஷனல் ஹெரால்டு பத்திரிக்கையின் பங்குகளை, சோனியாவும், ராகுலும் பங்குதாரர்களாக உள்ள யங் இந்தியா லிமிடெட் என்ற நிறுவனத்துக்கு, நேஷனல் ஹெரால்டு பத்திரிகையில் உள்ள பங்குதாரர்களின் ஒப்புதலை பெறாமல் மாற்றப்பட்டதாக புகார் எழுந்து. இதனையடுத்து சோனியா மற்றும் ராகுல் காந்தி மீது பாஜ தலைவர் சுப்பிரமணிய சுவாமி, டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை தற்போது அமலாக்கத் துறை விசாரித்து வருகிறது. இந்த வழக்கு தொடர்பாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஜூன் 8ம் தேதியும், , முன்னாள் காங்கிரஸ் தலைவரும், மக்களவை தலைவருமான ராகுல் காந்தி ஜூன் 2ம் ஆம் தேதியும் ஆஜராகுமாறு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியிருந்தது.  இந்நிலையில் இன்று நேஷனல் ஹெரால்டு வழக்கில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தியிடம் 3ம்  நாளாக அமலக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். சோனியா காந்தி, ராகுல்காந்தி மீது பொய் வழக்கு தொடர்ந்துள்ளதாக கூறி ஒன்றிய பாஜக அரசை கண்டித்து புதுச்சேரி மாநில காங்கிரசார் கடந்த 2 நாட்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் இன்று 3ம் நாளாக ஆளுநர் மாளிகையை நோக்கி பேரணியாக சென்று முற்றுகைப்போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி, புதுச்சேரி மாநில காங்கிரஸ் கட்சி அலுவலகம் முன்பு மாநில தலைவர் சுப்பிரமணியன், முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி, வைத்தியலிங்கம் எம்.பி. மற்றும் முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் என 500-க்கும் மேற்பட்டவர்கள் திரண்டனர். பின்பு அங்கிருந்து பேரணியாக சென்ற கட்சியினர், காந்திவீதி, அண்ணாசாலை வழியாக ஆளுநர் மாளிகை வந்தடைந்தனர். அப்போது ஆம்பூர் சாலை வழியாக சென்ற பேரணியை காவல்துறையினர் பாதுகாப்பு வளையம் வைத்து தடுத்து நிறுத்தினர். இதனால் காங்கிரஸாருக்கும்- போலீசாருக்கும் இடையே கடும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

இதில் அங்கிருந்த பாதுகாப்பு வளையம் மீது ஏறிய கட்சியினர், ஒன்றிய அரசு மற்றும் பிரதமருக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர்.  ஒன்றிய அரசு ராகுல்காந்திக்கு எதிராக இதுபோன்ற பொய்யான வழக்குகளை சித்தரித்து, கருத்துக்களை தெரிவித்து காங்கிரஸினரை அவமதித்து வருகின்றனர். எனவே இதனை வன்மையாக கண்டிக்கிறோம் என்று முழக்கமிட்டனர். இதையடுத்து சுமார் 50-க்கும் மேற்பட்ட போலீசார் அங்கு குவிக்கப்பட்டனர். பின்னர் போராட்டத்தில் ஈடுபட்ட கட்சியின் முக்கிய தலைவர்களை காவல்துறை கைது செய்தனர். மேலும், ஜனாதிபதி தேர்தல் விரைவில் நடக்கவுள்ள நிலையில், பொது வேட்பாளரை தேர்வு செய்யும் பணியில் எதிர்க்கட்சிகள் ஒன்று சேர்ந்து பொது வேட்பாளரை நிறுத்த முடிவு செய்துள்ளனர். இதனை தடுக்கவே பாஜகவினர் இதுபோன்ற செயலில் ஈடுபடுவதாக கூறி காங்கிரஸினர் கோஷங்களை எழுப்பினர். மேலும் இக்கட்சியின் தலைவர்களை பழிவாங்கும் நோக்கில் ஒன்றிய அரசு செயல்படுகிறது என்றும் கூறினர்.


Tags : Congress ,Governor's ,House ,Pondicherry , Puducherry, Governor's House, Siege Rally, Police- Protester, Push
× RELATED ரோடு ஷோவுக்கு வந்தபோது ஆளுநர்...