உ.பி.யில் புல்டோசர்கள் மூலம் வீடுகள் இடிப்பு விவகாரம்: இஸ்லாமிய அமைப்பின் மனு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணை

டெல்லி: உத்தரப்பிரதேசத்தில் ஆக்கிரமிப்பு குடியிருப்புகளை ஆளும் பா.ஜ.க. அரசு புல்டோசர்கள் கொண்டு இடிக்கும் நடவடிக்கைகளுக்கு தடை விதிக்கக்கோரி இஸ்லாமிய அமைப்பு தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் இன்று விசாரிக்க உள்ளது. இஸ்லாமியர்களின் இறைத்தூதர் நபிகள் நாயகத்தை பாஜக முன்னாள் நிர்வாகிகள் நுபுர் சர்மா, நவீன் ஜிண்டால் உள்ளிட்டோர் அவதூறாக இழிவுபடுத்தினர். இந்த விவகாரம் சர்வதேச பிரச்சனையாக வெடித்தது. நுபுர் சர்மா, நவீன் ஜிண்டால் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க கோரி கடந்த வெள்ளிக்கிழமை நாடுமுழுவதும் இஸ்லாமியர்கள் போராட்டம் நடத்தினர். அப்போது உத்திரப்பிரதேசத்தில் நடைபெற்ற போராட்டங்கள் மிக மோசமான மதவன்முறையாக வெடித்தது.

இதனையடுத்து வன்முறைக்கு காரணமானவர்கள் என கருதப்படும் 4 பேரை அடையாளப்படுத்தி அவர்களது வீடுகளை புல்டோசர்கள் மூலமாக உ.பி. அரசு இடித்து தரைமட்டமாக்கியது. இச்சம்பவம் அம்மாநிலத்தில் மிகப்பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இவ்வாறு செயல்படும் உத்தரப்பிரதேச அரசின் இந்த நடவடிக்கைக்கு தடைவிதிக்கக்கோரி  ஜமியத் உலேமா ஏ ஹிந்த் என்ற இஸ்லாமிய அமைப்பு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.  இந்த வழக்கு விசாரணை இன்று நடைபெற உள்ளது. உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஏ.எஸ். போபண்ணா, விக்ரம்நாத் ஆகியோர் முன்பாக இவ்வழக்கின் விசாரணை நடைபெறுகிறது. முன்னதாக இவ்விவகாரத்தை உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரிக்க வேண்டும் என்று ஓய்வுபெற்ற நீதிபதிகள் , மூத்த வழக்கறிஞர்கள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதியிருந்தனர். 

Related Stories: