×

வால்பாறைக்கு மாலை 6 மணிக்கு மேல் சுற்றுலா பயணிகள் வர தடை

வால்பாறை : வால்பாறைக்கு மாலை 6 மணிக்கு மேல் வெளியூர் நபர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் வாகனங்களில் வருவதற்கு வனத்துறையினர் தடை விதித்து உள்ளனர். வால்பாறை சுற்றிலும் ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு சொந்தமான பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி உள்ளது. நடுவில் வால்பாறை நகராட்சி 217 ச.கிமீ பரப்பளவில் உள்ளது.

இந்நிலையில், பலர் சமவெளி பகுதியில் இருந்து மாலை 6 மணிக்கு மேல் வால்பாறைக்கு வருவதாகவும், அப்படி வருபவர்கள் பலர் சமூக விரோத செயல்களில் ஈடுபடுவதாகவும், வெளியூர் நபர்கள் வனவிலங்குகள் தாக்குதலுக்கு ஆளாகாமல் தடுக்கவும் முன்னெச்சரிக்கையாக சுற்றுலா பயணிகள் மாலை 6 மணிக்கு மேல் வால்பாறைக்கு செல்ல ஆழியார் வனத்துறை சோதனைச் சாவடியில் கடந்த சில நாட்களாக அனுமதி மறுக்கப்படுகிறது.

இது குறித்து ஆனைமலை புலிகள் காப்பக கள இயக்குனர் கணேசன் கூறியதாவது: இரவு நேரங்களில் சட்டவிரோத சுற்றுலா, சாலையோரம் மது அருந்துவது, நள்ளிரவில் வால்பாறைக்கு போதைப்பொருள் கடத்துவது, மதுபானம் கடத்துவது போன்றவை கவலை அளிக்கிறது. நேற்று காலை பைக்கில் வந்த இரு சுற்றுலா பயணிகளிடம் இருந்து 200 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இவற்றை நெறிப்படுத்த வேண்டும். சுற்றுலாவை முன்வைத்து நடைபெற்று வரும் சட்டவிரோத செயல்களுக்கு இடம் அளிக்க கூடாது என்று கருதுகிறோம். மேலும் ஆம்புலன்ஸ், முதலுதவி சேவைகள், பழங்குடியின மக்கள் நடமாட்டம், உள்ளூர் அவசர காலப்பயணம் போன்ற அத்தியாவசிய சேவைகள் நிறுத்தப்படவில்லை.

இரவு நேரத்தில் சுற்றுலா வருபவர்கள், நள்ளிரவில் வருவதால் நாங்கள் நிறுத்துகிறோம். பாதுகாப்பு காரணங்களுக்காக அவர்களை தாமதமாக வனப்பகுதிக்குள் அனுமதிப்பது நல்லதல்ல. எனவே, சுற்றுலாவை விட மனித உயிரிழப்புகளை தடுப்பது மிகவும் முக்கியம்.
இந்நிலையில் வருவாய் துறை, காவல்துறை, வனத்துறை இணைந்து ஒருங்கிணைந்த சோதனை சாவடி அமைக்க திட்டம் உள்ளது.இவ்வாறு அவர்கள் கூறினர்.


சுற்றுலா பயணிகளிடம் கஞ்சா பறிமுதல்

பொள்ளாச்சி அருகே உள்ள ஆழியார் வன சோதனை சாவடியில் நேற்று வனத்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அந்த வழியாக பைக்கில் வேகமாக வந்த இருவரை நிறுத்தி, சோதனை செய்தனர். அப்போது அதில், 200 கிராம் கஞ்சா மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

விசாரணையில், திண்டுக்கல் மாவட்டம் பனைபட்டியை சேர்ந்த சதீஸ் (22), அவரது நண்பர் ஐதராபாத் கோல்கொண்டாவை சேர்ந்த தீபக் (22) என்பதும், அவர்கள் இருவரும் வால்பாறைக்கு சுற்றுலா செல்ல பைக்கில் வந்ததும், இருவரும் சுற்றுலா செல்லும் இடங்களில் கஞ்சா புகைக்கும் பழக்கம் உடையவர்கள் என்பதும் தெரிய வந்தது.

இதையடுத்து, பைக்குடன் கஞ்சா பொட்டலத்தை பறிமுதல் செய்ததுடன், அவர்கள் இருவரையும் ஆழியார் காவல்நிலையத்தில் வனத்துறையினர் ஒப்படைத்தனர். இதுகுறித்து ஆழியார் போலீசார் விசாரிக்கின்றனர்.

தொடரும் கரடி தாக்குதல்

வால்பாறை அடுத்துள்ள லோயர் பாரளை எஸ்டேட் பகுதி, பாறைமேட்டில் உள்ள தோட்ட அதிகாரிகள் மனமகிழ் மன்றம், ஆனைமலை கிளப் என அழைக்கப்படுகிறது. நேற்று முன்தினம் இங்கு இரவு காவலராக பணியாற்றிய சேவியர் (60). இரவு பணி முடிந்து கதவுகளை அடைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த போது, கிளப் வளாகத்தில் நடந்து வந்த கரடி அவரை தாக்கியது. இதில், அவருக்கு இடது கையில் காயம் ஏற்பட்டது அருகில் இருந்தவர்கள் கரடியை விரட்டி அவரை மீட்டு, வால்பாறை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

தகவலறிந்த வால்பாறை வனச்சரகர் வெங்கடேஷ் சம்பவ இடத்தை ஆய்வு செய்து, வனத்துறை குழுவினர் மூலம் கரடியை அப்பகுதியில் இருந்து வனப்பகுதிக்குள் விரட்டினர். பின்னர், மருத்துவமனையில் சந்தித்து, உடல் நலம் விசாரித்து, வனத்துறையின் உதவியை வழங்கினர். கடந்த 10 நாட்களில் 3 பேரை கரடி தாக்கி உள்ளது. இச்சம்பவம் தேயிலைத் தோட்ட தொழிலாளர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags : Valparai , Valparai, Tourist, After 6o clk, Forbidden to come
× RELATED கத்தியை காட்டி பணம் பறித்த 2 பேர் கைது