×

பில்லூர் 3-வது கூட்டுக்குடிநீர் திட்ட பணிகள் 65 சதவீதம் நிறைவு : அமைச்சர் கே.என்.நேரு கோவையில் பேட்டி

கோவை : கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு தலைமையில், தொழிலாளர் நலம் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் கணேசன் முன்னிலையில் அதிகாரிகள் ஆய்வு கூட்டம் நேற்று நடந்தது. இதில், குடிநீர் விநியோக திட்டப்பணிகளை விரைந்து செயல்படுத்துவது பற்றி விவாதிக்கப்பட்டது. இத்திட்டப்பணிகளை விரைந்து முடிக்க மாநகராட்சி மற்றும் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளுக்கு அமைச்சர் கே.என்.நேரு உத்தரவிட்டார். இக்கூட்டத்தில், கோவை தொகுதி எம்.பி., பி.ஆர்.நடராஜன், மாவட்ட கலெக்டர் சமீரன் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

இதனைத்தொடர்ந்து அமைச்சர் கே.என்.நேரு மேட்டுப்பாளையத்தில் நடந்துவரும் பில்லூர் 3-வது கூட்டுக்குடிநீர் திட்டப்பணிகளை ஆய்வு செய்தார். இப்பணிகளை விரைந்து முடித்து, மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அதன்பின், அமைச்சர் கே.என்.நேரு நிருபர்களிடம் கூறியதாவது: பில்லூர் 3-வது கூட்டுக்குடிநீர் திட்டத்தின்கீழ், குடிநீர் திட்ட குழாய் அமைக்கும் பணி நடைபெறும் இடங்களில், நிலம் கையகப்படுத்துவது தொடர்பான பிரச்னை உள்ளது. இந்த பணிகள் நிறைவடைந்தால், கோவை மாவட்டத்திற்கு 178 டிஎம்சி தண்ணீர் கிடைக்கும்.

கேரளாவில் இருந்து 98 டிஎம்சி தண்ணீர் வரவேண்டும். ஆனால், 33 டிஎம்சி தண்ணீர் மட்டுமே வருகிறது. பில்லூர் 3-வது கூட்டுக்குடிநீர் திட்டப்பணிகள் முடிவடைந்ததும் அனைத்து நீர்த்தேக்க தொட்டிகளிலும் தண்ணீர் நிரப்பப்பட்டு எல்லா பகுதிகளுக்கும் சீரான குடிநீர் விநியோகம் செய்யப்படும். தற்போதைய நிலையில் 65 சதவீத பணிகள் நிறைவடைந்துள்ளன.


மீதமுள்ள பணிகள் விரைவில் முடிவடையும். பில்லூர் அணையில் தேங்கியிருக்கும் சேறு, சகதிகளை தூர்வார அதிகாரிகளிடம் கலந்து ஆலோசித்து, உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார். மேட்டுப்பாளையம் செல்லும் வழியில் ரூ.49 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் சங்கனூர் பள்ளத்தையும் அமைச்சர் கே.என்.நேரு ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வின்போது, மாவட்ட கலெக்டர் சமீரன், மேயர் கல்பனா ஆனந்தகுமார், மாநகராட்சி கமிஷனர் பிரதாப், துணை மேயர் வெற்றிச்செல்வன், துணை கமிஷனர் ஷர்மிளா, மாவட்ட திமுக பொறுப்பாளர்கள் நா.கார்த்திக், பையா கிருஷ்ணன், சேனாதிபதி, முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிசாமி, முன்னாள் எம்எல்ஏ கோவை தங்கம் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.

Tags : Minister ,KN Nehru ,Coimbatore , Coimbatore, K.N Nehru, Billur Drinking Water
× RELATED கலைஞர் பிறந்தநாள் நூற்றாண்டு நிறைவு...